search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அஸ்தம்பட்டி உழவர் சந்தை முன்பு விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயம்.
    X
    சேலம் அஸ்தம்பட்டி உழவர் சந்தை முன்பு விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயம்.

    கண்ணீரை வரவழைக்கும் சின்ன வெங்காயம் விலை

    சேலம் பகுதியில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    சேலம்:

    வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சின்ன வெங்காயம் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அங்கிருந்து தமிழகத்திற்கு சின்ன வெங்காயம் விற்பனைக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. இதேபோல் தமிழகத்திலும் சின்ன வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    சேலம் மாநகரில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை மற்றும் தாதகாப்பட்டி ஆகிய 4 உழவர் சந்தைகளில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.80 முதல் 90 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வெளி மார்க்கெட்டை பொறுத்தவரையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.120 முதல் 140 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஈரப்பதம் உள்ள சின்ன வெங்காயம் கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரைக்கும், ஈரப்பதம் இல்லாத காய்ந்த சின்ன வெங்காயம் முதல் ரகம் ரூ.140-க்கும் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    சேலம் அஸ்தம்பட்டி உழவர் சந்தை முன்பு தற்காலிகமாக சில வியாபாரிகள் கடைகள் அமைத்து சின்ன வெங்காயம் விற்பனை செய்து வருகிறார்கள். அவர்கள் கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரைக்கும் நேற்று சின்ன வெங்காயத்தை விற்பனை செய்தனர். வீடுகளில் அன்றாடம் சமைக்கப்படும் உணவுகளில் சின்ன வெங்காயத்தின் தேவை அதிகமாக இருக்கும். தற்போது தட்டுப்பாடு காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் அதன் விலை கண்ணீரை வரவழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இது ஒருபுறம் இருக்க, வட மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் தரத்திற்கு ஏற்றவாறு கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

    பெரிய வெங்காயம் விலை உயர்வு காரணமாக ஓட்டல்களில் ஆம்லெட் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு மாறாக முட்டைகோஸ் பயன்படுத்தி ஆம்லெட் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. எனவே சின்ன மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த உழவர் சந்தையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
    Next Story
    ×