search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    தேனி மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை

    தேனி மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    தேனி:

    தேனி, போடி உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் மாலையில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து தேனியில் இரவு 10 மணியளவில் மீண்டும் பலத்த மழை பெய்யத்தொடங்கியது. இடி, மின்னலுடன் விடிய, விடிய பலத்த மழை கொட்டித் தீர்த்தது.

    அதுபோல், போடி, உத்தமபாளையம், ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தேவதானப்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையால், போடி, தேனி உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவில் மின்தடை ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் மின்தடை நீடித்தது. மீண்டும் மின்இணைப்பு வந்த சிறிது நேரத்தில், மீண்டும் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. இவ்வாறு அடிக்கடி ஏற்பட்ட மின்தடையால் மக்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமலும், கைக்குழந்தைகளை தூங்க வைக்க முடியாமலும் பரிதவித்தனர்.

    இந்த பலத்த மழை எதிரொலியாக வைகை, மஞ்சளாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. வைகை அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 883 கன அடியாக இருந்தது. நேற்று காலையில் நீர்வரத்து வினாடிக்கு 1,216 கன அடியாக அதிகரித்தது.

    மஞ்சளாறு அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 101 கன அடியாக இருந்த நிலையில், நேற்று காலையில் வினாடிக்கு 217 கன அடியாக அதிகரித்தது. சோத்துப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 39 கன அடியாக இருந்த நிலையில், நேற்று வினாடிக்கு 66 கன அடியாக அதிகரித்தது.

    மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையுள்ள 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் வருமாறு:-

    மஞ்சளாறு அணையில் 8.7 செ.மீ., போடியில் 6.5 செ.மீ., வீரபாண்டியில் 5.5 செ.மீ., அரண்மனைப்புதூரில் 5.4 செ.மீ., ஆண்டிப்பட்டியில் 5.08 செ.மீ., உத்தமபாளையத்தில் 4.8 செ.மீ., வைகை அணையில் 3.8 செ.மீ., பெரியகுளத்தில் 3.3 செமீ., சோத்துப்பாறையில் 1.6 செ.மீ., கூடலூரில், 1.5 செ.மீ. என மழையளவு பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் ஒரே நாளில் மொத்தம் 48 செ.மீ. மழை பெய்துள்ளது. இதன் சராசரி மழைப்பொழிவு 4 செ.மீ. ஆகும்.

    மழையால் தேனி பங்களாமேட்டில் ராஜவாய்க்கால் கரையோர பகுதிகளில் அமைந்துள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நள்ளிரவில் மழைநீர் புகுந்தது. வீடுகளுக்குள் இருந்த தண்ணீரை பொதுமக்கள் வாலியால் இரைத்து வெளியேற்றினர். அதுபோல், அரண்மனைப்புதூர் அம்பேத்கர் சிலைக்கு பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் மழைநீர் வடிந்து செல்வதற்கு போதிய வழியின்றி சாக்கடை கழிவுநீரும், மழைநீரும் தெருக்களில் தேங்கி நின்றது. காலையில் அந்த தண்ணீர் வடிந்தது. இருப்பினும் அப்பகுதி சேறும், சகதியுமாக மாறியது. இதனால், மக்கள் பரிதவிப்புக்குள்ளாகி உள்ளனர்.
    Next Story
    ×