search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைவினை பொருட்கள் தயாரிப்பு பயிற்சியை கலெக்டர் ஷில்பா ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
    X
    கைவினை பொருட்கள் தயாரிப்பு பயிற்சியை கலெக்டர் ஷில்பா ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    பெண்களுக்கு கைவினை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி- கலெக்டர் ஷில்பா ஆய்வு

    சேரன்மாதேவி அருகே பெண்களுக்கு கைவினை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுவதை கலெக்டர் ஷில்பா நேற்று ஆய்வு செய்தார்.
    நெல்லை:

    சேரன்மாதேவி அருகே உள்ள பூதத்தான்குடியிருப்பில் 175 பெண்களுக்கு கைவினை பொருட்கள் உற்பத்தி செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களது உற்பத்தி மற்றும் தொழில் வளர்ச்சி செயல்பாடுகளை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் சார்பில் கதர் கிராம தொழில்கள் புனரமைப்பு மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிராமங்களில் கைவினைஞர்களால் செய்யப்படும் தொழில்களை ஒருங்கிணைத்து ஒரு குழுமத்தின் கீழ், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், தனிநபர் வருமானம் அதிகரிக்கவும், அவர்கள் தயாரிக்கக்கூடிய பொருட்களை தரம் மேம்பாடு செய்து சந்தைப்படுத்தப்படுகிறது.

    சேரன்மாதேவி பூதத்தான்குடியிருப்பில் உள்ள காஸ்ட் அமைப்பு சார்பில் 175 பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு ‘களக்காடு நார் சாந்த தொழில் செய்யும் கைவினைஞர்கள் குழுமம்’ என்ற பெயரில் பயிற்சி அளிக்கப்பட்டு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த திட்டத்துக்கு கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் சார்பில் ரூ.96 லட்சம் மானியமாகவும், காஸ்ட் அமைப்பு சார்பில் ரூ.4 லட்சமும் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் மூலம் கைவினைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் புதிய வடிவமைப்பு பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சிகள் சிப்போ அமைப்பு மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் கற்றாழை நாரில் இருந்து பொருட்கள் தயாரித்தல், பனை ஓலை மற்றும் வாழைநாரில் இருந்து கைவினை பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. இங்கு ஆண்டு உற்பத்தி இலக்காக ரூ.75.53 லட்சத்துக்கு பொருட்கள் உற்பத்தி செய்து ரூ.86.76 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதன்மூலம் கைவினைஞர் ஒருவருக்கு நிரந்தர மாத வருமானமாக தற்போது ரூ.4 ஆயிரத்து 500 முதல் ரூ.5 ஆயிரம் வரை கிடைக்கும். இந்த திட்டத்தை கலெக்டர் தலைமையின் கீழ் வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு மூலம் கண்காணிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. அனைத்து கைவினைஞர்களுக்கும் மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடும் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், சிப்போ நிறுவன பொது மேலாளர் பழனிவேல் முருகன், மாவட்ட சமூக நல அலுவலர் சரசுவதி, சேரன்மாதேவி தாசில்தார் வெற்றிசெல்வி, காஸ்ட் நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுசீலா பாண்டியன், குழும வளர்ச்சி அலுவலர் லீலாவதி மற்றும் கைவினைஞர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×