
கோவை வடவள்ளி அருகே உள்ள மருதமலை அடிவாரம் அமரஜோதி நகரை சேர்ந்தவர் சிவமுருகன் (வயது 45). பால்வியாபாரி. இவரது மனைவி வைர ராணி (40). இவர்களுக்கு யுவஸ்ரீ (21), ஹேமலதா (19) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
இவர்களது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம். இவர்கள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்த பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
சிவமுருகன் பால் வியாபாரத்துடன் பெரிய பைனான்ஸ் அதிபர்களிடம் கடன் வாங்கி சிலருக்கு பைனான்ஸ் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். ஆனால் கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் சிவமுருகன் மிகுந்த நெருக்கடிக்கு தள்ளப்பட்டார். அவர் குடும்பம் நடத்தவும் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.
சிவமுருகனுக்கு கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி தருமாறு நேரில் வீட்டுக்கு வந்தும், செல்போன் மூலமாகவும் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று சிவமுருகன் வீட்டில் இருந்த போது அவருக்கு கடன் கொடுத்த ஒருவர் வீட்டுக்கு வந்து கடனை திருப்பி தருமாறு குழந்தைகள் முன்பு வைத்து கேட்டு உள்ளார். இது அவருக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியது.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிவமுருகன் கடன் தொல்லை தாங்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்வது என முடிவு செய்தார்.
இதனையடுத்து அவர் தனக்கு யார் யார்? பணம் தரவேண்டும். யார்? யாருக்கு கடன் கொடுக்க வேண்டும் என்ற பட்டியலை ஒரு நோட்டில் எழுதினார். பின்னர் இரவு 12 மணியளவில் வாழை பழத்தில் விஷத்தை தடவி தனது மனைவி, மற்றும் 2 மகள்களுக்கு கொடுத்து தானும் சாப்பிட்டார்.
விஷத்தை சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிவமுருகன், அவரது மனைவி வைர ராணி, மூத்த மகள் யுவஸ்ரீ ஆகியோர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இன்று அதிகாலையில் மயக்கம் தெளிந்து கண்விழித்த சிவமுருகனின் இளைய மகள் ஹேமலதா தனது தந்தை, தாய் மற்றும் சகோதரி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கதினர் சிவமுருகனின் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் சிவமுருகன், வைரராணி, யுவஸ்ரீ ஆகியோர் படுக்கையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் லேசான மயக்கத்துடன் உயிருக்கு போராடிய ஹேமலதாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று சிவமுருகன், அவரது மனைவி வைரராணி, மகள் யுவஸ்ரீ ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.