search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் அலுவலகம் வர்ணம் பூசி புதுப்பிக்கப்படுவதை படத்தில் காணலாம்.
    X
    கலெக்டர் அலுவலகம் வர்ணம் பூசி புதுப்பிக்கப்படுவதை படத்தில் காணலாம்.

    உடுமலையில் ரூ.82 கோடி செலவில் கால்நடை மருத்துவக்கல்லூரி கட்டுமான பணி : முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்

    திருப்பூருக்கு வருகிற 6-ந் தேதி வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ. 82 கோடி செலவில் உடுமலை அருகே கட்டப்பட உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
    திருப்பூர்:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 6-ந் தேதி திருப்பூர் வருகிறார். அன்று கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மேலும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் விஜய கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    ஒவ்வொரு துறையினரும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கிக் கூறினார். கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் அமீது உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் உடுமலை அருகே பண்ணைகிணறில் ரூ.82 கோடியே 13 லட்சம் மதிப்பில் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதுபோல் வீரபாண்டியில் கட்டப்படவுள்ள நான்காவது மண்டல அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் வருவாய் துறை, பொது சுகாதாரத்துறை சார்பில் புதிய கட்டிடங்களும் அடிக்கல் நாட்டுகிறார். மொத்தம் ரூ.90 கோடி மதிப்பிலான 9 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    மேலும் பல்லடம் அருகே ரூ.1 கோடியே 13 லட்சத்துக்கு கட்டி முடிக்கப்பட்ட கோழிஇன நோய் ஆராய்ச்சி கூடம் மற்றும் பள்ளி கல்வித்துறை, பொது சுகாதாரத் துறை உட்பட மொத்தம் ரூ.25 கோடியே 84 லட்சம் மதிப்பிலான 14 பணிகளை தொடங்கி வைக்கிறார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
    Next Story
    ×