search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அழுகிய நிலையில் உடல் இருந்த வீட்டில் போலீசார் விசாரணை நடத்திய போது எடுத்த படம்.
    X
    அழுகிய நிலையில் உடல் இருந்த வீட்டில் போலீசார் விசாரணை நடத்திய போது எடுத்த படம்.

    தண்ணீர் தொட்டிக்குள் இருந்து ஆண் பிணம் மீட்பு- கொலையா? என போலீசார் விசாரணை

    திருப்பூரில் பூட்டியிருந்த வீட்டில் தண்ணீர் தொட்டிக்குள் அழுகிய நிலையில் இருந்த ஆண் பிணத்தை போலீசார் மீட்டனர். இவரை யாராவது கொலை செய்து போட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருப்பூர்:

    திருப்பூர் காலேஜ் ரோடு சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி எதிரே ராஜூ என்பவருக்கு சொந்தமான 9 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் ஒரு வீட்டில் இருந்து நேற்று காலை கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் சென்றனர். வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். வீட்டுக்குள் நாலு அடி உயர சிமெண்டு தண்ணீர் தொட்டி இருந்தது. அதற்குள் அழுகிய நிலையில் பிணம் இருந்தது. உடலில் ஆடைகள் எதுவும் இல்லை. மிகவும் உருக்குலைந்து இருந்ததால் இறந்தது ஆணா? பெண்ணா? என்று கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. தண்ணீர் தொட்டிக்குப் பக்கத்தில் பினாயில் ஊற்றப்பட்ட பாட்டில்களும் இருந்தன.

    இதை தொடர்ந்து பிணத்தை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத அளவுக்கு மிகவும் உருக்குலைந்து காணப்பட்டது. எனவே சம்பவ இடத்திற்கு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இறந்தது ஆண் என தெரியவந்தது. மேலும் தடயவியல் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வீட்டை தூத்துக்குடியை சேர்ந்த முத்து, மதுரையை சேர்ந்த சங்கர் ஆகியோர் வாடகைக்கு எடுத்து தங்கி இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் பனியன் நிறுவனத்தில் அயர்ணிங் மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளனர். கடந்த மாதம் 13-ந் தேதி முதல் வீடு பூட்டியிருந்தது.

    அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த முத்து, சங்கர் ஆகியோரை செல்போனில் தொடர்பு கொள்ளமுடியவில்லை. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வீடு பூட்டியுள்ளதால் பிணம் 20 நாட்களுக்கு மேலாக அந்த வீட்டில் இருந்தது தெரியவந்துள்ளது. தண்ணீர் தொட்டிக்குள் பிணமாக கிடந்தவர் யார்? என்று கண்டறிய முடியவில்லை.

    இறந்தவரை கொலை செய்து தண்ணீர் தொட்டிக்குள் போட்டு விட்டு வீட்டை பூட்டி விட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தேக மரணம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை முடுக்கி உள்ளனர். மேலும் அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த முத்து, சங்கர் ஆகியோரை தேடி அவர்களின் சொந்த ஊருக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
    Next Story
    ×