search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திண்டிவனம் அருகே தோட்ட வீட்டில் பதுக்கி வைத்திருந்த எரிசாராயம்-மதுபாட்டில்கள் பறிமுதல்

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தோட்ட வீட்டில் பதுக்கி வைத்திருந்த எரிசாராயம் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தேங்காய்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் எரிசாராயம்- மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு 11 மணி அளவில் ஒலக்கூரை அடுத்த தேங்காய்பாக்கம் பகுதியில் உள்ள வீடுகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்த வீட்டை திறந்து போலீசார் சோதனை செய்தனர்.

    அங்கு ஏராளமான கேன்கள் மற்றும் அட்டைபெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த கேன்களை திறந்து பார்த்தபோது அதில் எரிசாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு 569 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    அங்கிருந்த அட்டைபெட்டிகளை பிரித்து பார்த்தபோது அதில் மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த 960 மதுபாட்டில்களும் கைப்பற்றப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம் மற்றும் மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். அவை அனைத்தும் திண்டிவனம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அந்த வீடு சென்னையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அந்த நபரை பிடிக்க போலீசார் சென்னைக்கு விரைந்துள்ளனர்.

    எரிசாராயம் மற்றும் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறதா? இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×