
உலக நாடுகளே ஆவலுடன் எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது. அதில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ எதிர்த்து ஜனநாயக கட்சி போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் (வயது 55) என்பவர் போட்டியிடுகிறார்.
இவரது தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள பைங்காநாடு கிராமத்தை சேர்ந்தவர்கள்.
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் முதன் முதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் போட்டியிடுகிறார் என்பதும், தங்கள் கிராமத்தை பூர்வீக பூர்வீகமாகக் கொண்ட கோபாலன் என்பவரின் பேத்தி இத்தகைய உயர்ந்த பதவிக்கு போட்டியிடுவதன் மூலம் தங்களது பைங்காநாடு கிராமம் உலகப்புகழ் பெற்றுவிட்டதாகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்கும் நாளை எதிர்பார்த்திருப்பதாகவும் பைங்காநாடு கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தேர்தல் நடைபெறும் இன்றைய தினம் அவர்களது குடும்பத்தினரின் முக்கிய வழிபாட்டு ஆலயமாக இருந்த பைங்காநாடு தர்மசாஸ்தா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இந்த சிறப்பு வழிபாட்டினை உள்ளூர் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு செய்தனர். மேலும் துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி உணர்வோடு அவ்வூர் மக்கள் வழிபாடு செய்தனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பைங்காநாடு கிராமத்தில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவுக்கு கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் நன்கொடை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.