
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள கோவைப்புதூரை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
மாணவி கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் போது அதே வகுப்பில் படிக்கும் தூத்துக்குடியை சேர்ந்த தேவஎஸ்ரா (வயது 22) என்ற மாணவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். அப்போது அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர். அப்போது 2 பேரும் சேர்ந்து ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை செல்போனில் எடுத்து வைத்து இருந்தனர்.
தொடர்ந்து வந்த காலகட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மூடப்பட்டது. இதனையடுத்து 2 பேரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். அப்போது 2 பேரும் செல்போன் மூலமாக பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்தநிலையில் இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் காதலை கைவிடுமாறு தனது மகளிடம் கூறி கண்டித்தனர். இதனையடுத்து மாணவி தேவஎஸ்ராவுடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தேவஎஸ்ரா மாணவியை தொடர்பு கொண்டு நாம் வீட்டை விட்டு ஓடிபோய் திருமணம் செய்து கொள்ளலாம். நான் இங்கு இருந்து புறப்பட்டு வந்து உன்னை அழைத்து செல்கிறேன் என்று கூறி உள்ளார். அதற்கு மாணவி எனது பெற்றோரை மீறி என்னால் வர முடியாது என கூறி விட்டார். அதற்கு தேவஎஸ்ரா நீ வரவில்லை என்றால் நாம் 2 பேரும் தனியாக இருக்கும் போது எடுத்த ஆபாச படங்களை சமூக வலைதளங்கள் மற்றும் உனது தந்தைக்கு அனுப்பி விடுவதாக கூறி மிரட்டினார்.
இதனால் பயந்த மாணவி நடந்த சம்பவங்களை தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இந்தநிலையில் தேவஎஸ்ரா மாணவியின் ஆபாச படங்களை அவரது தந்தையின் செல்போனுக்கு அனுப்பினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து தனது மகளிடம் கேட்டார். அதற்கு மாணவி எனக்கு தெரியாமலேயே என்னுடைய செல்போனில் நான் எடுத்து வைத்து இருந்து படங்களை தேவஎஸ்ரா எடுத்து வைத்து மிரட்டுவதாக தெரிவித்தார்.
என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த மாணவியின் பெற்றோர் மாணவி மூலமாக தேவ எஸ்ராவை தொடர்பு கொள்ள செய்தனர். அப்போது அவரிடம் மாணவி நான் வீட்டை விட்டு வெளியே வருகிறேன். நாம் எங்கேயாவது சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என கூறினார். இதனையடுத்து தேவஎஸ்ரா தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு கோவைக்கு வந்தார். இது குறித்து மாணவி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் பஸ் நிலையத்துக்கு விரைந்து சென்று அங்கு மாணவிக்காக காத்து இருந்த தேவஎஸ்ராவை கைது செய்தனர்.
பின்னர் அவரது செல்போனில் இருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். தேவஎஸ்ரா மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.