search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உருளைக்கிழங்கு
    X
    உருளைக்கிழங்கு

    வெங்காயத்தை தொடர்ந்து உருளைக்கிழங்கு விலையும் உயருகிறது

    வெங்காயத்தை தொடர்ந்து உருளைக்கிழங்கு விலையும் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை சில்லரை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
    சென்னை:

    வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாகவே புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. விலையை கேட்டால், வெங்காயத்தை உறிக்காமலேயே இல்லத்தரசிகளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. இதனால் சமையலில் வெங்காயத்தை கை நிறைய அள்ளி எடுத்து பயன்படுத்திய காலம் மாறி, கிள்ளி எடுத்து பயன்படுத்தும் நிலைக்கு இல்லத்தரசிகள் தள்ளப்பட்டுள்ளனர். வெங்காயத்தை தொடர்ந்து உருளைக்கிழங்கின் விலையும் உயர்ந்து வருகிறது.

    கடந்த வாரம் ரகத்துக்கு ஏற்ப ஒரு கிலோ உருளைக்கிழங்கு சில்லரை விலையாக ரூ.30 முதல் ரூ.45 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அது தற்போது ரூ.60 முதல் ரூ.70 வரை உயர்ந்துவிட்டது. பெரும்பாலானவர்கள் தங்களுடைய சமையலில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை அதிகமாக பயன்படுத்தி வந்தனர். ஆனால் அவற்றின் விலை உயர்வு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    இதுகுறித்து கோயம்பேடு உருளைக்கிழங்கு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் வி.ஆர்.சவுந்தரராஜன் கூறியதாவது:-

    மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானலில் இருந்தும் உருளைக்கிழங்கு கொண்டு வரப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 லாரிகளில் உருளைக்கிழங்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது 15 லாரிகளில் மட்டும் தான் உருளைக்கிழங்கு வருகிறது.

    கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ ரூ.12, ரூ.13-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் உருளைக்கிழங்கு பயிரிடுவதில் ஆர்வம் செலுத்தவில்லை. சந்தைக்கு வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. உருளைக்கிழங்கு மொத்த மார்க்கெட்டில் கிலோவுக்கு ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு பின்னர் உருளைக்கிழங்கு விலை கணிசமாக குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×