search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தா.பேட்டையில் குண்டும், குழியுமாக உள்ள புறவழிச்சாலை.
    X
    தா.பேட்டையில் குண்டும், குழியுமாக உள்ள புறவழிச்சாலை.

    தா.பேட்டையில் குண்டும், குழியுமான புறவழிச்சாலையை சீரமைக்க கோரிக்கை

    தா.பேட்டையில் குண்டும், குழியுமாக மோசமாக உள்ள புறவழிச்சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தா.பேட்டை:

    தா.பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து நாமக்கல் செல்வதற்கு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தகனரக வாகனங்கள் செல்ல புறவழிச்சாலை அமைக்கப் பட்டுள்ளது. இந்த புறவழிச்சாலையின் நடுவே தா.பேட்டை பேரூராட்சி பராமரிப்பில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் தார்சாலை உள்ளது. இந்தசாலை கடந்த பல வருடங்களாக ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

    பெரம்பலூரில் இருந்து நாமக்கல் செல்லும் கனரக வாகனங்கள் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆனால் புறவழிச்சாலை மிகவும் மோசமாக உள்ளதால் தா.பேட்டை கடைவீதி வழியாக வாகனங்கள் நாமக்கல் செல்கின்றன. இதனால் கடைவீதி பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

    பேரூராட்சிக்கு உட்பட்ட இந்த புறவழி சாலையை நெடுஞ்சாலைத்துறை இடம் ஒப்படைத்து பராமரிக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பேரூராட்சி அலுவலர்களும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

    முசிறியில் இருந்து தா.பேட்டை வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் பஸ்கள் இந்த சாலை வழியாகத்தான் செல்லவேண்டும். தற்போது இந்த சாலை சீரமைக்க படாததால் தா.பேட்டை கடைவீதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக மேட்டுப்பாளையத்துக்கு சில நேரங்களில்செல்கிறது.

    இது குறித்து பஸ் டிரைவர்கள் கூறுகையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த சாலை மேடு பள்ளமாக இருப்பதால் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் அடைகின்றனர். பேருந்தும் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. மேலும் தார்சாலை தற்போது புழுதி வாரி இறைக்கும் மண்சாலையாக மாறியுள்ளதால் பஸ்சுக்குள் உட்கார்ந்து இருக்கும் பயணிகளும் சிரமப்படுகின்றனர் என்று கூறினர்.

    மழைகாலங்களில் குழிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் இந்த புறவழிச் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×