search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம்பிடித்த கரூர் மாணவி - ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

    பெற்றோர் எதிர்ப்பால் வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்ட கரூர் மாணவி ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஈச்சங்கோட்டை சாமிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகன் கவியரசன் (வயது 24). இவர், கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்யும் பணியை செய்து வருகிறார். இவரும், கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியை சேர்ந்த கோபால் மகள் தாரா(21) என்பவரும் காதலித்து வந்தனர்.

    தாரா, திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படித்து வருகிறார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு தாராவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தாரா, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி கவியரசனை எளிய முறையில் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதனிடையே தாராவின் தந்தை கோபால், தோகைமலை போலீஸ் நிலையத்தில், தனது மகள் கடத்தப்பட்டிருப்பதாக புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். கரூர் மாவட்ட போலீசார், தஞ்சை மாவட்டத்தில் முகாமிட்டு தேடுவதை அறிந்த தாராவும், கவியரசனும் நேற்று காலை ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தோகைமலை போலீசார், ஒரத்தநாடு போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.

    தோகைமலை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து இருப்பதால் தாராவையும், கவியரசனையும் ஒரத்தநாடு போலீசார் தோகைமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடந்து காதல் ஜோடியை போலீசார் கரூர் மாவட்டத்துக்கு அழைத்து சென்றனர்.
    Next Story
    ×