search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் ஆய்வு நடத்திய போது எடுத்த படம்.
    X
    தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் ஆய்வு நடத்திய போது எடுத்த படம்.

    குமரி மாவட்டத்தில் தாலுகா, வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் கலெக்டர் ஆய்வு

    குமரி மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலங்களில் கலெக்டர் அரவிந்த் ஆய்வு நடத்தினார். அப்போது பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் கூடாது என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில், அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், கிள்ளியூர், திருவட்டார், விளவங்கோடு என 6 தாலுகா அலுவலகங்களும், அகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு, தக்கலை, திருவட்டார், கிள்ளியூர், முன்சிறை, மேல்புறம் என 9 வட்டார வளர்ச்சி அலுவலகங்களும் உள்ளன. இவற்றில் கல்குளம், கிள்ளியூர், விளவங்கோடு, திருவட்டார், தோவாளை ஆகிய 5 தாலுகா அலுவலகங்களில் நேற்று மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

    அப்போது தாலுகா அலுவலகங்கள் வாயிலாக வழங்கபட்டு வரும், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்கள், பட்டா மாறுதல் ஆணைகள் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். ஆன்லைன் வாயிலாக பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மீது உடனடியாக ஆய்வு செய்து, உரிய பதில் அளிக்க வேண்டும். விண்ணப்பித்தலின் போது, ஏதேனும் ஆவணங்கள் தேவைப்பட்டால் அதனை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். சான்றிதழ்கள் வழங்குவதில் எவ்வித காலதாமதமும் ஏற்பட கூடாது என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து, குருந்தன்கோடு, தக்கலை, கிள்ளியூர், முன்சிறை, திருவட்டார், தோவாளை ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது கிராம பஞ்சாயத்துகள் மற்றும் யூனியன்களில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள், தெருவிளக்கு அமைத்தல், உட்கட்டமைப்பு பணிகள் ஆகியவை குறித்துகேட்டறிந்து, பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தடையின்றி வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்குஅறிவுறுத்தினார். உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக நடைபெற்று வரும் திட்டப்பணிகள் தரமானதாக இருக்க வேண்டும் எனவும், பணிகளை அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து, தரமானதாக இருப்பதை உறுதி செய்திட வேண்டுமெனவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    முன்னதாக மாவட்ட கலெக்டர் அரவிந்த், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சரண்யா அரியுடன், சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த நிகழ்ச்சிகளில், தாசில்தார்கள் ஜெகதா (கல்குளம்), ராஜசேகர் (கிள்ளியூர்), அஜிதா (திருவட்டார்), ஜுலியன் ஜீவர் (தோவாளை), புரந்தரதாஸ் (விளவங்கோடு), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயஸ்ரீ (குருந்தன்கோடு), புஷ்பலதா (தக்கலை), விஜயன் (திருவட்டார்), இங்கர்சால் (தோவாளை), கீதா (கிள்ளியூர்), விஜயன் (முன்சிறை) மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×