search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் துரைக்கண்ணு
    X
    அமைச்சர் துரைக்கண்ணு

    பாபநாசம் தொகுதியில் தொடர்ந்து 3 முறை வெற்றி வாகை சூடியவர் துரைக்கண்ணு

    வேளாண்மைத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த துரைக்கண்ணு 5 முறை கிரீஸ் கர்மா போன்ற மத்திய அரசின் விருதுகளை பெற்று தமிழக வேளாண்மை துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
    தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ராஜகிரியை சேர்ந்தவர் அமைச்சர் துரைக்கண்ணு. இவருடைய பெற்றோர் ராமு படையாட்சி -அஞ்சம்மாள். 28-3-1948 அன்று பிறந்த துரைக்கண்ணு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். ராஜகிரியில் உள்ள காஸ்மியா மேல்நிலைப் பள்ளியில் படித்தார். கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.

    இவருடைய மனைவி பானுமதி. இவர்களுக்கு 2 மகன்கள். 4 மகள்கள். இதில் மூத்த மகன் வீரபாண்டியன் தஞ்சை காட்டுத்தோட்டத்தில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் விதைப்பரிசோதனை அலுவலராக பணியாற்றி வருகிறார். இளைய மகன் அய்யப்பன் என்கிற சண்முகபிரபு, தஞ்சை மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளராக உள்ளார்.

    மகள்கள் தமிழ்ச்செல்வி, வெண்ணிலா, சத்தியா, நீலாவதி ஆகிய 4 பேருக்கும் திருமணமாகி விட்டது. தொடக்க காலத்தில் அரசு கூட்டுறவு சங்கத்தில் ஊழியராக பணியாற்றி வந்த துரைக்கண்ணு, எம்.ஜி.ஆர். மீது ஏற்பட்ட பற்று காரணமாக அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இறங்கினார்.

    அ.தி.மு.க.வில் சேர்ந்து ராஜகிரி கிளை பிரதிநிதி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர். கடந்த 1995-ம் ஆண்டு முதல் ஒன்றிய செயலாளராக 26 ஆண்டுகள் பதவி வகித்தார். தஞ்சை மாவட்ட வேளாண்மை விற்பனை குழு தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

    2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் 2-வது முறையாக வெற்றி வாகை சூடினார். 2016 தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஆனார். 2016-ல் துரைக்கண்ணு அமைச்சராக பதவி ஏற்றார்.

    அவருக்கு வேளாண்மை மற்றும் கால்நடைத்துறை ஆகிய 2 துறைகள் ஒதுக்கப்பட்டன. சில நாட்களில் கால்நடைத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த ஆண்டு(2019) ஆண்டு முதல் தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பதவி வகித்து வந்தார்.

    வேளாண்மைத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த இவர் 5 முறை கிரீஸ் கர்மா போன்ற மத்திய அரசின் விருதுகளை பெற்று தமிழக வேளாண்மை துறைக்கு பெருமை சேர்த்துள்ளார். பாபநாசம் சட்டசபை தொகுதியில் ரெகுநாதபுரம் ஊராட்சியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைத்து, கிராமப்புற ஏழை மாணவர்களை பயன் அடைய செய்துள்ளார்.

    பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அண்டகுடி-சுந்தரபெருமாள் கோவில் இடையே காவிரி, குடமுருட்டி, ஆற்றின் இடையே பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொண்டார். இதேபோல் மேட்டுத்தெரு மற்றும் கணபதி அக்ரஹாரம் ஆகிய கிராமங்களில் காவிரி ஆற்றின் நடுவே பாலம் அமைத்தார். பாபநாசம், சாலியமங்கலத்தில் வேளாண் கிடங்கு அமைத்து தந்தார். குளிரூட்டப்பட்ட வேளாண் கிடங்குகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை அமைச்சர் துரைக்கண்ணு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று நள்ளிரவு மரணம் அடைந்தார்.
    Next Story
    ×