search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    10 செயற்கைகோள்களை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் வடிவமைப்பதை படத்தில் காணலாம்.
    X
    10 செயற்கைகோள்களை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் வடிவமைப்பதை படத்தில் காணலாம்.

    பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் வருகிற 7-ந்தேதி விண்ணில் பாய்கிறது - இஸ்ரோ விஞ்ஞானிகள் நடவடிக்கை

    பூமி கண்காணிப்பு உள்ளிட்ட 10 செயற்கைகோள்களுடன் வருகிற 7-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் விண்ணில் பாய்கிறது. இதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர்.
    சென்னை:

    இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அதில் நம் நாட்டுக்கு சொந்தமான செயற்கைகோள்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த வணிக ரீதியிலான செயற்கைகோள்களையும் விண்ணுக்கு செலுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது சிறிய வகை செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்காக எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளையும் இஸ்ரோ தயாரித்து வருகிறது. அவற்றையும் டிசம்பர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

    இந்தநிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்டை வருகிற 7-ந்தேதி விண்ணில் ஏவுகிறது. இதில் நம் நாட்டுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது. அத்துடன், வெளிநாடுகளை சேர்ந்த வணிக ரீதியிலான 9 செயற்கைகோள்களையும் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    கடந்த ஜனவரி 17-ந்தேதி அதிகாலை 2.35 மணிக்கு இந்தியாவின் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் ஜிசாட்-30 செயற்கைகோள், பிரெஞ்சு கயானாவில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி பூமி கண்காணிப்புக்கான ஜிசாட்-1 செயற்கைகோளை ஏவ திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

    இதனை சரி செய்து விண்ணுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டபோது, கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் இஸ்ரோ பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், நம் நாட்டுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் வருகிற 7-ந்தேதி மாலை 3.02 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இந்த செயற்கைகோள் மூலம் விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு பணிகளை துல்லியமாக மேற்கொள்ள முடியும்.

    இந்த செயற்கைகோள் அனுப்ப தயாரிக்கப்பட்டுள்ள பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 51-வது ராக்கெட்டாகும். மேலும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 76-வது ராக்கெட் இதுவாகும். அத்துடன் முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 38-வது ராக்கெட் மற்றும் பி.எஸ்.எல்.வி. டிஎல் என்ற நவீன ரகத்தில் 2-வது ராக்கெட் என்ற பெருமையையும் இது பெறுகிறது.

    இதனுடன் தொழில்நுட்ப கண்டுப்பிடிப்புகளுக்காக லுதிவேனியா நாட்டைச் சேர்ந்த ஒரு செயற்கைகோள், கடல் பயன்பாட்டுக்காக லக்ஸம்பர்க் நாட்டை சேர்ந்த 4 செயற்கைகோள்கள், பல்வேறு பயன்பாட்டுக்கான தொலை உணர்வுக்கான அமெரிக்காவைச் சேர்ந்த 4 லெமூர் செயற்கைகோள்கள். இந்த 3 நாடுகளை சேர்ந்த 9 வணிக ரீதியிலான செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். இறுதி கட்டப்பணியான கவுண்ட் டவுன் வருகிற 5 அல்லது 6-ந்தேதி தொடங்கும் என்று தெரிகிறது.

    இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.
    Next Story
    ×