
இந்த நிலையில் போக்குவரத்து அனைத்தும் விடப்பட்டு உள்ளதாலும், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு வருவதாலும் ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். பவுர்ணமி நேற்று மாலை 6.41 மணிக்கு தொடங்கி இன்று (சனிக்கிழமை) இரவு 8.45 மணிக்கு நிறைவடைகிறது. கொரோனா ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் இருப்பதால் ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலத்திற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இருப்பினும் பவுர்ணமி நேற்று மாலையில் தொடங்கியதால் நேற்று பகலில் ஏராளமானோர் தனித் தனியாக கிரிவலம் சென்றனர்.
தொடர்ந்து கிரிவலப்பாதையில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் காரில் சென்றவாறு ஆய்வு செய்தார். பின்னர் மதியத்திற்கு மேல் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சந்திப்பு பகுதிகளில் போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டது.
இதையடுத்து கிரிவலம் செல்ல வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் கிரிவலம் செல்ல முடியாமல் வெளியூர் பக்தர்கள் மட்டுமல்லாது உள்ளூர் பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனையொட்டி திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் கிரிவலப்பாதையில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். பவுர்ணமி நேரத்தில் கிரிவலப் பாதையில் நேற்று மக்கள் யாரும் கிரிவலம் செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.