search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மழைக்காலத்தில் மின் விபத்துகளை தவிர்ப்பது எப்படி?- மின்வாரிய அதிகாரி விளக்கம்

    மழைக்காலத்தில் மின் விபத்துகளை தவிர்ப்பது எப்படி? என்பது குறித்து நெல்லை மின்வாரிய ஆய்வாளர் தெரிவித்து உள்ளார்.
    நெல்லை:

    நெல்லை மின்வாரிய ஆய்வாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சாதனங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். மின்சார பிளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்து விட வேண்டும். பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும். 30 எம்.ஏ. ஆர்.சி.சி.பி. அல்லது ஆர்.சி.பி.ஓ. (மின்கசிவு தடுப்பான்)-ஐ பயனீட்டாளரின் இல்லங்களில் உள்ள மெயின் சுவிட்ச் போர்டில் பொருத்துவதன் மூலம் மின்கசிவினால் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்த்திடலாம்.

    உடைந்த சுவிட்சுகள், பிளக்குகளை உடனே மாற்றி விட வேண்டும். பழுதடைந்த மின்சார சாதனங்களை உபயோகிக்கக்கூடாது. கேபிள் டி.வி. ஒயர்களை மின் கம்பிகளின் அருகில் கொண்டு செல்லக்கூடாது. ஒவ்வொரு வீட்டுக்கும் சரியான நில இணைப்பு (எர்த் பைப்) அமைப்பதுடன் அதனை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும். சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வீட்டின் ஒயரிங் அமைப்பை சோதனை செய்து தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ள வேண்டும்.

    மின்கம்பத்திற்காக போடப்பட்ட தாங்கு கம்பிகளின் மீது அல்லது மின்கம்பத்தின் மீது கயிறு கட்டி துணிகளை காய வைக்கக்கூடாது. குளியலறை, கழிப்பறையில் ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்தக்கூடாது. சுவரின் உள்பகுதியில் மின் ஒயர்களுடன் கூடிய பி.வி.சி. பைப்புகள் பதிக்கப்பட்டு இருந்தால், அப்பகுதியில் ஆணி அடிப்பதை தவிர்க்க வேண்டும். மின்கம்பம், தாங்கு கம்பியில் கால்நடைகளை கயிற்றால் கட்டி வைக்கக்கூடாது. மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக்கூடாது. அதன் மீது விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது. அறுந்து விழுந்த மின்கம்பிகளின் அருகில் செல்லாமல், அதுகுறித்து உடனே மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்களை போதுமான இடைவெளி விட்டு கட்ட வேண்டும். மின்சாதனங்களில் தீ விபத்து ஏற்படும்போது, மணல், கம்பளி போர்வை, உலர்ந்த ரசாயன பொடி, கரியமிலவாயு போன்றவற்றை பயன்படுத்தி தீயை அணைக்க வேண்டும். மின்சாரத்தினால் ஏற்பட்ட தீயை தண்ணீரால் அணைக்க முயற்சிக்கக் கூடாது. மின்சாரத்தினால் தீ விபத்து ஏற்பட்டால், உடனே மெயின் சுவிட்சை ஆப் செய்து விட வேண்டும். இடி, மின்னலின்போது திறந்தவெளியில் நிற்காமல், கான்கிரீட் மேற்கூரையாலான கட்டிடத்துக்குள் செல்ல வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×