search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மணிகண்டபிரவுவை, அர்ஜூன் சம்பத் சந்தித்து ஆறுதல் கூறிய காட்சி.
    X
    மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மணிகண்டபிரவுவை, அர்ஜூன் சம்பத் சந்தித்து ஆறுதல் கூறிய காட்சி.

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அனைத்து கட்சிகளும் காலி- அர்ஜூன் சம்பத் சொல்கிறார்

    பா.ஜனதாவுடன் இணைய வேண்டிய அவசியம் இல்லை என்றும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அனைத்து கட்சிகளும் காலியாகி விடும் என்றும் திண்டுக்கல்லில் அர்ஜூன் சம்பத் கூறினார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்தவர் மணிகண்டபிரபு (வயது 28). இவர், இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவராக உள்ளார். இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீது வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அவரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கத்தியால் வெட்டியதாக தெரிகிறது.

    இதில் காயமடைந்த மணிகண்டபிரபு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன்சம்பத் நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தார். பின்னர் அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கு சிகிச்சை பெறும் மணிகண்டபிரபுவை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.

    இந்த சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவமனை முன்பு அவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்ட முடிவில் அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி மணிகண்டபிரபு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் தாக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் சாதி கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திருமாவளவன் செயல்படுகிறார். இதற்கு தமிழக முதல்-அமைச்சர் முடிவு கட்ட வேண்டும். திண்டுக்கல்லில் தோல் தொழிற்சாலைகளால் மண்வளம், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, குடகனாற்றில் தண்ணீர் வந்தால் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் குடகனாறு விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறோம். குடகனாறு பாசன விவசாயிகளுக்கு உரிய நீரை, தாமதமின்றி பங்கீட்டு வழங்க வேண்டும்.

    தமிழகத்தில் மாற்றம், நல்லாட்சியை விரும்புபவர்கள் பா.ஜனதாவில் சேர்ந்து வருகின்றனர். அதிலும், குறிப்பாக தி.மு.க. கூடாரம் காலியாகி கொண்டிருக்கிறது. அதை பொறுத்து கொள்ள முடியாமல் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பிரச்சினையை கிளப்புகின்றனர்.

    தமிழகத்தில் ஆன்மிக அரசியல் எழுச்சி பெறக்கூடிய சூழல் உருவாகிவிட்டது. 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஆன்மிக அரசியல் தான் வெற்றிபெறும். திராவிட இயக்க அரசியல் பாணி முடிவுக்கு வரும். ரஜினிகாந்த் ஏற்கனவே அரசியலில் தான் இருக்கிறார். 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிட்டு வெற்றி பெறுவார்.

    பா.ஜனதாவுடன் இணைய வேண்டிய அவசியம், ரஜினிகாந்துக்கு இல்லை. அவருக்கு தனி செல்வாக்கு உள்ளது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அனைத்து கட்சிகளின் கூடாரமும் காலியாகி விடும். அ.தி.மு.க. உண்மையான ஜனநாயக கட்சி. ஒரு தொண்டர், முதல்-அமைச்சராகி இருக்கிறார். திராவிட இயக்க முதல்-அமைச்சர்களில், எடப்பாடி பழனிசாமி தான் சிறந்தவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×