search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்புமணி ராமதாஸ்
    X
    அன்புமணி ராமதாஸ்

    வெள்ளத்தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    சென்னையில் பெருமழை பெய்வதற்கு முன்பாக மாநகரின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 12-ந் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்தும், மழை-வெள்ளம் கட்டுக்கடங்காமல் சென்றால் நிலைமையை சமாளிக்க செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அந்த கூட்டத்திற்கு பிறகு நீண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. அவ்வளவுக்கு பிறகும் தான் சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளத்தடுப்பு பணிகள் நிறைவடையாமல் உள்ளன.

    கடந்த 2015, 2017 பருவமழையின்போது சென்னையிலும், பிற வட மாவட்டங்களிலும் ஏற்பட்ட பாதிப்புகளை மக்கள் இன்னும் மறக்கவில்லை. கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட பாதிப்பு, இழப்புகளில் இருந்து மக்களால் இன்னும் மீண்டு வர முடியவில்லை. இத்தகைய சூழலில் மழை வெள்ளம் தாக்கினால், அதன் பாதிப்புகளை மக்களால் நிச்சயமாக தாக்குப்பிடிக்க முடியாது. எனவே, சென்னையில் பெருமழை பெய்வதற்கு முன்பாக மாநகரின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், புறநகர் மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நீர் தேங்காமல் உடனடியாக வடிவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×