search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள்
    X
    கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள்

    வழிப்பறி, திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது- 22 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

    பெரம்பலூரில் வழிப்பறி, திருட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து, 22 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 38). கட்டிட ஒப்பந்ததாரரான இவர் சம்பவத்தன்று திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் பெரம்பலூர் புறவழிச்சாலையான வடக்கு மாதவி சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி குமாரிடம் இருந்த 2½ பவுன் நகை, 2 செல்போன்களை பறித்து சென்றனர். இது தொடர்பாக குமார் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தார்.

    இந்நிலையில் குமாரிடம் இருந்து நகை-செல்போன்களை பறித்தது பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு சமத்துவபுரத்தை சேர்ந்த முருகனின் மகன் ஆட்டோ டிரைவரான நவீன் என்கிற நவீன்குமார் (20), லாடபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் தினேஷ் என்ற தினேஷ்குமார் (20), ஆறுமுகத்தின் மகன் நந்தா என்ற பெரியசாமி (19) மற்றும் 18 வயதுடைய சிறுவன் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து தலைமறைவாக இருந்த அவர்கள் 4 பேரையும் பிடிக்க பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோஜ், ராம்குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் பெரம்பலூர்-மதராசா சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது நவீன்குமார், தினேஷ்குமார், பெரியசாமி, 18 வயதுடைய சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்து, நகை-செல்போன்களை பறிமுதல் செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில், குமாருக்கு, நவீன்குமார் உள்ளிட்ட 4 பேரும் தொடர்பு கொண்டு ரூ.1 லட்சம் கொடுத்தால் நகை-செல்போன்களை தந்து விடுவதாக கூறியுள்ளனர். அதை வைத்து தான் மேற்கண்ட 4 பேரையும் கைது செய்ய முடிந்தது. மேலும் அந்த 4 பேருக்கும் வேறு ஏதேனும் திருட்டு வழக்குகளில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணையை நடத்திய போது தான், எங்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

    சமீபத்தில் பெரம்பலூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டுபோன இருசக்கர வாகனங்களை திருடியவர்களும் இவர்கள் 4 பேர் தான் என்பது தெரியவந்தது. மது குடிப்பதற்காகவும், உல்லாசமாக சுற்றித்திரிவதற்காகவும் திருடிய இருசக்கர வாகனங்களை அவர்கள் மிகவும் குறைந்த விலைக்கு தெரிந்த நபர்கள், தெரியாத நபர்களிடம் விற்பனை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். அதில், தற்போது 22 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

    திருடர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களது ஆவணங்களை காண்பித்து, இருசக்கர வாகனத்தை பெற்று செல்லலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×