search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துரைமுருகன்
    X
    துரைமுருகன்

    போலீஸ் தலைமையகத்தில் டிஜிபி, ஸ்பெஷல் டிஜிபி என்று நியமிப்பதா?- துரைமுருகன் கண்டனம்

    போலீஸ் தலைமையகத்தில் டிஜிபி, ஸ்பெஷல் டிஜிபி என்று நியமிக்கப்பட்டுள்ளதைத் திரும்பப் பெற வேண்டும் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ் தாஸ் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பதவி உயர்வு அளித்து சட்டம் ஒழுங்கு ஸ்பெஷல் டி.ஜி.பி.யாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்திருப்பது, சுப்ரீம் கோர்ட்டால் பிரகாஷ் சிங் வழக்கில் வழங்கப்பட்ட 7 கட்டளைகளுக்கும், தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் 2013-க்கும் முற்றிலும் எதிரானதாகும். தமிழகத்தில் ஏற்கனவே சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக அதாவது, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனராக திரிபாதி 2 ஆண்டுகளுக்கு (ஜூன் 2021 வரை), பிரகாஷ் சிங் வழக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, அவரது அதிகாரத்தை குறைக்கும் வகையில் போலீஸ் தலைமையகத்தில் இன்னொரு டி.ஜி.பி. அந்தஸ்துள்ள அதிகாரியை சட்டம்-ஒழுங்கு பணிகளில் நியமித்திருப்பது, ஒட்டுமொத்த காவல்துறை நிர்வாகத்தையே சீரழிக்கும் மிக மோசமான முன்னுதாரணம் ஆகும்.

    தனக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக, உலக அளவில் புகழ் பெற்ற தமிழக காவல்துறைக்கு, குறிப்பாக சட்டம்-ஒழுங்கு பணிகளை கண்காணிக்க இரு ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமித்திருப்பது வேதனைக்குரியது. தமிழக காவல்துறையை சீரழிக்கும் முதல்-அமைச்சரின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. ராஜேஷ்தாஸ் என்ற ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு கொடுப்பது தவறில்லை. அவருக்கு வேறு பதவிகள் கொடுப்பதிலும் தவறில்லை. ஆனால் அவரை ஏற்கனவே இருக்கும் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.க்கு போட்டியாக நியமிப்பதும், அதுவும் அவரது அறைக்கு எதிரே ஒரு அறையில் அமர்த்தி வைப்பதும் முதல்-அமைச்சருக்கு அழகல்ல.

    இரண்டு டி.ஜி.பி.களுக்கு என்னென்ன பொறுப்பு?. தமிழ்நாட்டில் உள்ள காவல்துறை அதிகாரிகள் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருக்கும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனருக்கு கட்டுப்பட வேண்டுமா? அல்லது ஸ்பெஷல் டி.ஜி.பி.க்கு கட்டுப்பட வேண்டுமா?. தலைமை அலுவலகத்தில் பனிப்போர் துவங்கினால், அது ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காவல் நிலையங்களிலும் எதிரொலிக்கும். தமிழக காவல்துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கையும் அறவே தகர்த்து எறியப்பட்டு விடும்.

    ஆகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று அ.தி.மு.க.விற்குள் உருவாக்கியுள்ளது போல், காவல்துறை தலைமையகத்தில் டி.ஜி.பி., ஸ்பெஷல் டி.ஜி.பி என்று உருவாக்கியுள்ளதை திரும்ப பெற்று பிரகாஷ் சிங் வழக்கின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பினை மதிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×