search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்.முருகன்
    X
    எல்.முருகன்

    இந்து பெண்களை அவமானப்படுத்த துணைபோகிறார் மு.க.ஸ்டாலின்- எல்.முருகன் குற்றச்சாட்டு

    கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவாக இருந்தார். இப்போது இந்து பெண்களை அசிங்கப்படுத்தியவர்களுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துள்ளார் என்று எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா கட்சி சார்பில் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்களை தேர்தலுக்கு தயார்படுத்தவும் வெற்றிவேல் யாத்திரை என்ற பிரசார ரத யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இந்த யாத்திரை அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந் தேதி திருத்தணியில் தொடங்குகிறது. மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் ரத யாத்திரை அங்கிருந்து புறப்பட்டு திருவள்ளூர் மாவட்டத்தை நிறைவு செய்கிறது. மறுநாள் 7-ந் தேதி (ஓய்வு).

    8-ந் தேதி சென்னை கிழக்கு மற்றும் மேற்கு, மத்திய சென்னை கிழக்கு, மேற்கு, சென்னை கிழக்கு, தென் சென்னை ஆகிய மாவட்டங்களில் நடக்கிறது.

    9-ந் தேதி காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களிலும் நடக்கிறது.

    தொடர்ந்து வெற்றிவேல் யாத்திரை முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் அனைத்து மாவட்டங்கள் வழியாக சென்று டிசம்பர் 6-ந் தேதி திருச்செந்தூரை சென்றடைகிறது.

    தொடக்க நிகழ்ச்சி மற்றும் அறுபடை வீடுகளிலும் நடக்கும் நிகழ்ச்சிகளிலும், பா.ஜனதா முதல்-மந்திரிகள் உள்பட அகில இந்திய அளவிலான தலைவர்கள் பங்கேற்கும் வகையில் பயணத் திட்டம் தயாராகி வருகிறது.

    திருச்செந்தூரில் நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டாவை அழைக்க முடிவு செய்துள்ளார்கள்.

    யாத்திரைக்கான பயண திட்டங்களை கட்சியின் பொது செயலாளர் கரு.நாகராஜன் தலைமையிலான குழுவினர் வகுத்து வருகிறார்கள்.

    இந்த யாத்திரையில் பங்கேற்கும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விஜயதசமி தினமான இன்று காப்பு கட்டிக் கொண்டார்கள்.

    பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் வேல் பூஜை நடத்தப்பட்டது. அப்போது ‘வேல்வேல் வெற்றிவேல்’, ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகா’ என்ற கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

    அதைத்தொடர்ந்து மாநில தலைவர் எல்.முருகன் காப்பு கட்டி தொடங்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் காப்பு கட்டி கொண்டார்கள்.

    பின்னர் அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் எல்.முருகன் பேசியாதாவது:-

    பா.ஜனதா கட்சியின் வெற்றிவேல் யாத்திரை தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்துக்களுக்கு எதிராக தேச விரோத சக்திகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்.

    முருகப்பெருமானை போற்றி வழிபடும் கந்தசஷ்டி கவசத்தை கயவர் கூட்டம் அருவறுக்கதக்க வகையில் சித்தரித்தது. அப்போது இந்துக்கள் தங்களுக்கு உதவ யாரும் இல்லையா என்று வேதனைப்பட்டனர். அந்த நேரத்தில் நாங்கள் இருக்கிறோம் என்று பா.ஜனதா கட்சி துணை நின்றது.

    கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவாக இருந்தார். இப்போது இந்து பெண்களை அசிங்கப்படுத்தியவர்களுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துள்ளார். பட்டியலின மக்களையும் அவமதித்தார்கள். இதுதான் அவர்களின் சமூக நீதி.

    வடமாநிலங்களில் நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு குரல் கொடுக்கும் கனிமொழி தமிழ்நாட்டில் நடக்கும் சம்பவங்களை கண்டிக்க தயங்குவது ஏன்?

    வருகிற தேர்தலில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் அமர்வார்கள். என்னை பொறுத்தவரை நான் போட்டியிட போவதில்லை. எனது சகோதர சகோதரிகள் வெற்றி பெற தமிழகம் முழுவதும் உழைப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×