search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழங்கள்
    X
    பழங்கள்

    ஆயுத பூஜை- மாதவரம் பழ மார்க்கெட்டில் ரூ.4 கோடிக்கு பழங்கள் விற்பனை

    ஆயுத பூஜையையொட்டி மாதவரம் பழ மார்க்கெட்டில் ரூ.4 கோடிக்கு பழங்கள் விற்பனையாகி உள்ளது.
    சென்னை:

    கொரோனா பரவலுக்கு மத்தியிலும் ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் நேற்று களை கட்டியது.

    கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பழ மார்க்கெட் மாதவரத்திலும், பூ மார்க்கெட் வானகரத்திலும் இயங்கி வருகிறது. ஆயுத பூஜையையொட்டி இந்த 2 இடங்களிலும் பழ மற்றும் பூ விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மாதவரம் பழ மார்க்கெட் டில் ரூ.4 கோடி அளவுக்கு பழங்கள் விற்பனையாகி உள்ளது.

    வானகரம் பூ மார்க்கெட்டில் ரூ.1½ கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளது. மாதவரம், கொளத்தூர், வடபழனி, அசோக்நகர் பகுதிகளிலும் தனித்தனியாக பூ வியாபாரம் நடைபெற்றது. இதன் மூலம் ரூ.2 கோடி அளவுக்கு பூக்களும் விற்பனையாகியுள்ளது.

    இருப்பினும் கடந்த ஆண்டு ஆயுதபூஜைக்கு நடைபெற்றது போன்று இந்த ஆண்டு விற்பனை இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கோயம்பேட்டில் பழ மார்க்கெட் செயல்பட்டு வந்தபோது கடந்த ஆண்டு ஆயுதபூஜைக்கு ரூ.10 கோடி அளவுக்கு விற்பனை நடைபெற்றதாக பழ வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதே போல பூ மார்க்கெட் கோயம்பேட்டில் செயல்பட்டு இருந்தால் ரூ.5 கோடி அளவுக்கு விற்பனை நடைபெற்று இருக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    எனவே விரைவில் பழ மார்க்கெட்டையும், பூ மார்க்கெட்டையும் கோயம்பேட்டுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் இந்த கோரிக்கையை அரசு தீவிரமாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வியாபாரிகளின் ஒட்டுமொத்த விருப்பமாக உள்ளது.

    தீபாவளி பண்டிகையையொட்டி கோயம்பேட்டில் வியாபாரம் செய்யும் அளவுக்கு பழ மார்க்கெட்டையும், பூ மார்க்கெட்டையும் அங்கு திறக்க அரசு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அப்போதுதான் அனைத்து வியாபாரிகளும் பயன் அடைவார்கள் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×