search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு
    X
    வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு

    வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு

    அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு உள்ளதால் 24 மணி நேரமும் டாக்டர்கள் குழு கண்காணித்து வருகிறது.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாளின் இறுதி சடங்குகள் கடந்த 13-ந் தேதி எடப்பாடியில் நடந்தது.

    அதில் கலந்து கொள்வதற்காக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு காரில் சேலத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

    விழுப்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

    அதன்பிறகு அமைச்சர் துரைக்கண்ணு சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து அவருக்கு ஏற்பட்ட மூச்சு திணறலை குணப்படுத்தினார்கள்.

    என்றாலும், மூச்சு விடுவதில் அமைச்சர் துரைக்கண்ணுக்கு தொடர்ந்து சிரமம் இருந்தது. இதனால் காவேரி மருத்துவமனையில் அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என்ற பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதற்காக டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் நேற்று திடீரென அமைச்சர் துரைக்கண்ணுக்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்.

    அவரது நுரையீரலில் கடும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக காவேரி ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதற்காக அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு இருப்பதாகவும், செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

    இது தொடர்பாக காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    72 வயதாகும் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13-ந் தேதி மூச்சு திணறல் மற்றும் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வேறு சில உடல்நல பிரச்சினைகளும் உள்ளன.

    சமீபத்தில் எடுக்கப்பட்ட சி.டி.ஸ்கேன் மூலம் அவரது நுரையீரலில் 90 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவருக்கு எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு உள்ளது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆஸ்பத்திரிக்கு வருகை தந்து அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நலம் குறித்து விசாரித்தார். அமைச்சரின் குடும்பத்தினரிடம் முதல்-அமைச்சர் பேசினார். அப்போது அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உடன் இருந்தனர்.

    அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை தொடர்ந்து பின்னடைவாக உள்ளது. அவர்  தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். அவரை 24 மணி நேரமும் கண்காணிக்க டாக்டர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் அமைச்சருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இவ்வாறு காவேரி மருத்துவமனை செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

    அமைச்சர் துரைக்கண்ணு பாபநாசம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வானவர். 2006, 2011, 2016-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக அவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த சில தினங்களாக குறைந்து வந்தாலும் முன்கள பணியாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் பாதிக்கப்படுவது குறையவில்லை. தமிழகத்தில் 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

    அமைச்சர்களில் செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர்கள் இருவரும் குணமடைந்தனர்.
    Next Story
    ×