search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெய்த மழையில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.
    X
    பெய்த மழையில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.

    நிரம்பி வழியும் சுருட்டப்பள்ளி தடுப்பணை- பொதுமக்கள் மகிழ்ச்சி

    சுருட்டப்பள்ளி தடுப்பணை நிரம்பி வழிவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    சென்னை:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணி அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 31 அடி ஆகும். இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். இப்படி திறந்து விடப்படும் தண்ணீர் ராமகிரி, சுப்பா நாயுடு கண்டிகை, அச்சம்மநாயுடு கண்டிகை, காரணி, சுருட்டபள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்கக்கடலில் கலக்கிறது.

    தற்போது ஆந்திர மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பிச்சாட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. நீர்மட்டம் 29 அடியாக உயர்ந்தது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்துவிட ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ஆரணி ஆற்றின் கிளை ஆறான நந்தனம் ஆற்றில் பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் தற்போது ஆரணி ஆற்றில் பாய்ந்து வருவதால் சுருட்டப்பள்ளியில் உள்ள தடுப்பணை முழுவதுமாக நிரம்பியது.

    இங்கிருந்து வெளியேறும் உபரி நீர் தற்போது ஆரணி ஆற்றில் பாய்ந்து ஊத்துக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. சுருட்டப்பள்ளி அணை முழுவதுமாக நிரம்பியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக மழை பொய்த்து போனதால் ஆரணி ஆறு வறண்டு காணப்பட்டது. தற்போது சுருட்டப்பள்ளி தடுப்பணை முழுவதுமாக நிரம்பியதால் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் கும்பல் கும்பலாக வந்து பார்த்து செல்கின்றனர். சிலர் மீன் பிடித்து, குளித்து மகிழ்ந்தனர்.

    இந்த நிலையில் பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மாபள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது. அம்மாபள்ளியில் வினாடிக்கு 900 கன அடி வீதம் திறக்கப்படும் தண்ணீர் பூண்டி ஏரிக்கு 180 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும்.

    ஏரியின் நீர்மட்டம் 28.09 அடியாக பதிவானது. 1,327 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 600 கனஅடி வீதமும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 15 கன அடி வீதமும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
    Next Story
    ×