search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி நாகர்கோவில் கோர்ட்டில் ஆய்வு செய்த போது எடுத்த படம்.
    X
    சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி நாகர்கோவில் கோர்ட்டில் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    குமரி கோர்ட்டுகளில் தலைமை நீதிபதி ஆய்வு

    குமரி மாவட்ட கோர்ட்டுகளில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி ஆய்வு நடத்தினார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பத்மநாபபுரம், குழித்துறை, இரணியல் மற்றும் பூதப்பாண்டி ஆகிய 5 கோர்ட்டுகள் உள்ளன. இந்த கோர்ட்டுகளில் ஆய்வு செய்வதற்காக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி நேற்று குமரி மாவட்டம் வந்தார். அவரை குழித்துறை கோர்ட்டில் வைத்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி கோர்ட்டில் ஆய்வு நடத்தினார்.

    இதே போல இரணியல், பத்மநாபபுரம் ஆகிய கோர்ட்டுகளை ஆய்வு செய்து விட்டு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கோர்ட்டுக்கு அவர் வந்தார். அப்போது அவரை மாவட்ட நீதிபதி அருள்முருகன், மகிளா கோர்ட்டு நீதிபதி பிரபாசந்திரன், வனத்துறை நீதிபதி ஆஷா கவுசல்யா நிஷாந்தினி, போக்சோ கோர்ட்டு நீதிபதி எழில்வேலவன் மற்றும் நீதிபதிகள் வாஞ்சிநாதன், சிவகுமார், கிறிஸ்டியன், ராபின் ஜார்ஜ் ஆகியோர் வரவேற்றனர்.

    முதலில் மாற்று முறை தீர்வு மைய கட்டிடத்துக்கு சென்று பார்வையிட்டார். அதன் பிறகு மகிளா கோர்ட்டு, குடும்பநல கோர்ட்டு, கூடுதல் மகிளா கோர்ட்டு, குற்றவியல் கோர்ட்டுகள் மற்றும் போக்சோ கோர்ட்டுகளுக்கு சென்று ஆய்வு செய்தார். ஒவ்வொரு கோர்ட்டிலும் நீதிபதி அறை, பணியாளர்கள் அறை உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டார். பொதுமக்கள் ஓய்வு அறைக்கும் சென்று பார்வையிட்டார். ஆய்வு முடிந்ததும் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவர் மரிய ஸ்டீபன், செயலாளர் டி.கே.மகேஷ், பொருளாளர் விஸ்வராஜன் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, “குமரி மாவட்டத்தில் 4 மாவட்ட நீதிபதி பணியிடங்கள் உள்பட காலியாக இருக்கும் 9 பணியிடங்களை நிரப்ப வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.
    Next Story
    ×