search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய்
    X
    மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய்

    மெகபூபா முப்தியை கைது செய்ய வலியுறுத்தல், மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை உள்ளிட்ட முக்கிய செய்திகள்

    தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு, மெகபூபா முப்தியை கைது செய்ய வலியுறுத்தல், மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.

    * குஜராத் மாநிலத்தில் விவசாயிகளுக்கான கிசான் சூர்யோதயா திட்டம், கிர்னார் ரோப்வே திட்டம், குழந்தைகள் இருதய மருத்துவமனை ஆகிய திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.

    * டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கான கட்டுமான பணிகள் டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இது 2 ஆண்டுகளுக்குள் முடியும் என தகவல் வெளியாகி உள்ளது.

    * மெகபூபா முப்தியின் தேசத்துரோகக் கருத்துக்களை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் பாஜக கூறி உள்ளது. 

    * இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 78 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 53,370 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 70.16 லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 1.51 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 89.78 சதவீதமாகவும் உள்ளது.

    * மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கபில் தேவ், தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    * ஆயுத பூஜை, விஜயதசமி திருநாட்களை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

    * தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். பண்டிகை காலம் என்பதால், நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும்  கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.

    * தமிழகத்தில் 28ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ள நிலையில், 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    * தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மணல் திருட்டை தடுக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்ட விரோத மணல் குவாரிகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    * மதுரை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

    * கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை நிகழ்ச்சியை மகாதானபுரத்தில் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    * நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த கவனம் செலுத்துவேன் எனவும், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கூறி உள்ளார்.

    * பிளாஸ்மா சிகிச்சையால் கொரோனா நோயாளிகளுக்கு பெரிதாக பலன் இருக்காது என்று விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    * கொரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு மக்களின் தூக்கம், உணவுப்பழக்கம் போன்றவற்றை மாற்றியமைத்திருப்பதுடன், உடல் பருமனையும் அதிகரித்து இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

    * கேப்டன் என்ற காரணத்தால் நான் எங்கும் ஓடி ஒளிந்துவிட முடியாது என மும்பை அணியுடனான தோல்விக்குப்பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி தெரிவித்துள்ளார்.

    * சென்னை அருகே உள்ள பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது அரசியலை தொடர்புபடுத்தி போஸ்டர் ஒட்டவேண்டாம், மக்கள் பணியை தொடரவேண்டும் என விஜய் அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Next Story
    ×