search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரியில் கலெக்டர் மலர்விழி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.
    X
    தர்மபுரியில் கலெக்டர் மலர்விழி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    பிரதமரின் கிராம முன்னேற்ற திட்டத்தை 20 கிராமங்களில் செயல்படுத்த நடவடிக்கை- அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

    தர்மபுரி மாவட்டத்தில் பிரதமரின் கிராம முன்னேற்ற திட்டத்தை 20 கிராமங்களில் செயல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் பிரதம மந்திரி கிராம முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் முறைகள் குறித்த அதிகாரிகள் ஆய்வு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா, கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் வேடியப்பன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாசசேகர், தாட்கோ மாவட்ட மேலாளர் சிட்டிபாபு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:-

    பிரதம மந்திரி கிராம முன்னேற்ற திட்டத்தை தர்மபுரி மாவட்டத்தில் செயல்படுத்த 2018-2019-ம் நிதியாண்டில் ஆதிதிராவிட மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களான போளையம்பள்ளி, நவலை, அனுமந்தபுரம், சிவாடி, பே.தாதம்பட்டி, சிக்களூர், வேடகட்டமடுவு, மருதிபட்டி, வீரப்பநாயக்கன்பட்டி, பொய்யபட்டி ஆகிய 10 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதேபோல் 2019-2020-ம் நிதியாண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த சக்கிலிபட்டி, தாதம்பட்டி, எருமியம்பட்டி, பாறையபட்டி, வேப்பநத்தம், கீழானூர், பெரியபண்ணிமடுவு, மொரப்பூர், பாப்பிசெட்டிப்பட்டி, எலவடை ஆகிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த 20 கிராமங்களில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற கூடிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

    இந்த கிராமங்களில் தனிநபர் திறமையை ஊக்கப்படுத்தி வருமானம் ஈட்ட கூடியவராக மாற்றுதல், கல்வியின் மூலம் தனிநபர் மற்றும் சமுதாய முன்னேற்றத்தை கொண்டு வருதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவத்துறை மூலம் மக்களின் உடல் நலத்தை மேம்படுத்துதல், குடிநீருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், விவசாயம் சார்ந்து வாழும் மக்களை மேம்படுத்துதல், மின்சாரம், தெருவிளக்கு வசதி உள்ளிட்ட பணிகளை இந்த திட்டத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும். இதற்காக முதன்மை அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்க வேண்டும். இவர்கள் 20 கிராமங்களை சேர்ந்த மக்களை சந்தித்து அடிப்படை தேவைகள் குறித்து ஆய்வு செய்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.
    Next Story
    ×