search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    செருப்பை நாய் தூக்கி செல்வதாக கூறி வியாபாரியிடம் ரூ.1¾ லட்சம் கொள்ளை

    திண்டுக்கல்லில் செருப்பை நாய் தூக்கி செல்வதாக கூறி வியாபாரியிடம் ரூ.1¾ லட்சத்தை 2 பேர் கொள்ளையடித்து சென்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கிருஷ்ணசாமிபிள்ளைதெருவை சேர்ந்தவர் நடேஷ்குமார் (வயது 54). இவர் திண்டுக்கல் பெரியகடைவீதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் 2.30 மணி அளவில் ஊழியர்கள் சாப்பிட சென்று விட்டனர். இதனால் நடேஷ்குமார் மட்டும் கடையில் இருந்தார். அப்போது கடையில் வியாபாரமான தொகையை வங்கியில் செலுத்துவதற்கு முடிவு செய்தார்.

    எனவே கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை வெளியே எடுத்து எண்ணிக் கொண்டிருந்தார். அதில் மொத்தம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது. இதையடுத்து மேஜையில் வைத்து ரூபாய் நோட்டுகளை சரிபார்த்து கொண்டிருந்தார். அப்போது கடையின் முன்பு ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து நின்றது. அந்த மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்தனர்.

    அதில் ஒருவன் இறங்கி கடையை நோக்கி வேகமாக வந்தான். பின்னர் ரூபாய் நோட்டுகளை சரிபார்த்து கொண்டிருந்த நடேஷ்குமாரிடம், மிகவும் பதற்றமான குரலில் கடைக்கு வெளியே கிடந்த உங்கள் செருப்பை நாய் தூக்கிக் கொண்டு ஓடுகிறது என்று கூறினான். திடீரென ஒருவர் வந்து செருப்பை நாய் தூக்கி செல்வதாக கூறியதை கேட்டு நடேஷ்குமாரும் பதற்றம் அடைந்தார்.

    இதனால் ஒருகணம் கூட யோசிக்காமல் ரூபாய் நோட்டுகளை அப்படியே வைத்து விட்டு கடைக்கு வெளியே வந்து செருப்பை பார்த்தார். அதற்குள் அந்த மர்ம நபர் நடேஷ்குமார் மேஜையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை எடுத்து கொண்டு, மோட்டார்சைக்கிளில் மற்றொரு நபருடன் சேர்ந்து தப்பிவிட்டான். உடனே அவர் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். ஆனால் மின்னல் வேகத்தில் அந்த நபர்கள் மாயமாகி விட்டனர்.

    இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் நடேஷ்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாய் செருப்பை தூக்கி செல்வதாக கூறி, வியாபாரியின் கவனத்தை திசைதிருப்பி மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×