search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரிய வெங்காயம்
    X
    பெரிய வெங்காயம்

    சேலத்தில் பெரிய வெங்காயம் விலை கடும் உயர்வு

    சேலத்தில் பெரிய வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    சேலம்:

    இந்தியாவில் மராட்டியம், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் வட மாநிலங்களில் பெய்த கனமழையால் பெரிய வெங்காய பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டது.

    இதன் காரணமாக அங்கிருந்து வழக்கமாக தமிழகத்திற்கு வரவேண்டிய பெரிய வெங்காயம் வரத்து 80 சதவீதம் குறைந்ததால், விலை படிப்படியாக உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வட மாநிலங்களில் பெய்த தொடர் மழையால் சேலம் மார்க்கெட்டிற்கு வர வேண்டிய பெரிய வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் சேலத்தில் பெரிய வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    உழவர் சந்தைகளிலும் பெரிய வெங்காயத்திற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக உழவர் சந்தைகள் மற்றும் தினசரி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.90 முதல் ரூ.100 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பெரிய வெங்காயத்தை போலவே சின்ன வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில் தற்போது ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் சின்ன மற்றும் பெரிய வெங்காயத்தின் தேவை அதிகரிக்கும் என்பதால் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×