search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவினாசி அருகே பழைய பஞ்சு குடோனில் தீப்பிடித்து எந்திரங்கள் சேதமாகி இருப்பதை படத்தில் காணலாம்.
    X
    அவினாசி அருகே பழைய பஞ்சு குடோனில் தீப்பிடித்து எந்திரங்கள் சேதமாகி இருப்பதை படத்தில் காணலாம்.

    அவினாசி அருகே பழைய பஞ்சு குடோனில் தீ விபத்து

    அவினாசி அருகே பழைய பஞ்சு குடோனில் தீப்பிடித்து ரூ.70 லட்சம் பஞ்சு பேல்கள் மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசம் ஆனது.
    அவினாசி:

    அவினாசி அருகே செம்பியநல்லூர் ஊராட்சி ராம்நகரில் கழிவு பஞ்சு குடோன் உள்ளது. இங்கு பஞ்சை அரைத்து நூலாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பஞ்சு குடோனில் 10-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தனர். இதற்கிடையில் நேற்று அதிகாலை 6 மணிக்கு எந்திரத்தில் திடீரென தீப்பொறி ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் எந்திரம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அப்போது பணியில் இருந்த தொழிலாளர்கள், எந்திரத்தில் பிடித்த தீயை அணைக்க முயன்றனர்.

    ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. அதற்குள் அருகில் இருந்த கழிவு பஞ்சு மூட்டைகளிலும், மற்ற எந்திரங்களிலும் தீ பரவியது. இதனால் பணியில் இருந்த தொழிலாளர்கள் குடோனில் இருந்து அலறியபடி வெளியே ஓட்டம் பிடித்தனர். பின்னர் இது குறித்து அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே திருப்பூர் மற்றும் அவினாசி தீயணைப்பு நிலையங்களில் இருந்து 4 தீயணைப்பு லாரிகளுடன் தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் (பொறுப்பு) தலைமையில் 15-க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    3 மணி நேர போராட்டத்திற்கு பின்னரே தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் இந்த தீ விபத்தில் சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள பேல்கள், எந்திரங்கள், பஞ்சுமூட்டைகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதில் தொழிலாளர்கள் காயமின்றி தப்பினர்.

    இது குறித்து போலீசார் விசாரித்த போது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×