search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூடப்பட்ட பழனி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையம்.
    X
    மூடப்பட்ட பழனி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையம்.

    பழனி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் மூடல்

    நோயாளிகள் குணம் அடைந்ததாலும், கடந்த 3 நாட்களாக புதிதாக யாருக்கும் தொற்று இல்லை என்பதாலும் பழனி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த கொரோனா சிகிச்சை மையம் மூடப்பட்டது.
    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி, பாலசமுத்திரம், ஆயக்குடி ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததை அடுத்து பழனியாண்டவர் கலைக்கல்லூரி, அரசு மருத்துவமனை, நெய்க்காரப்பட்டி தனியார் கல்லூரி ஆகிய இடங்களில் நோய் தடுப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. அதன்பின்னர் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தது. பொதுமக்கள் கூடும் இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் முககவசம் அணியாத பட்சத்தில் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் பழனி பகுதியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கின.

    இதைத்தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நெய்க்காரப்பட்டி, பழனியாண்டவர் கல்லூரியில் இருந்த கொரோனா சிகிச்சை மையங்கள் மூடப்பட்டன. பழனி அரசு மருத்துவமனையில் மட்டும் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் உள்ளாட்சி அமைப்பு மற்றும் சுகாதாரத்துறை இணைந்து தினமும் பழனி பகுதியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் தினசரி சுமார் 250 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

    பழனி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 6 பேர் கடைசியாக சிகிச்சையில் இருந்தனர். பின்னர் அவர்களும் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். இதையடுத்து கடந்த 3 நாட்களாக பழனி பகுதியில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. எனவே பழனி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த கொரோனா சிகிச்சை மையம் நேற்றுமுன்தினம் முதல் மூடப்பட்டது. அந்த வார்டில் பணியாற்றி வந்த டாக்டர்கள், பணியாளர்கள் நேற்று முதல் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். அதன்பின்னர் பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் பணிக்கு திரும்புவர். மேலும் வரும் நாட்களில் பழனி பகுதியில் யாருக்கேனும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அவர்கள் திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் ஆயுதபூஜை, தீபாவளி ஆகிய பண்டிகைகள் வருவதால் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வெளியில் வர வேண்டும் என்று நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் பழனியை பொறுத்தவரை பக்தர்கள் அதிகம் கூடும் பகுதியாக முருகன் கோவில் உள்ளது. அங்கு கோவில் சார்பில் தீவிர சோதனைக்கு பின்னர் குறைந்தபட்ச எண்ணிக்கையிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×