search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் வெங்காய மண்டியில் உள்ள ஒரு கடையில், வெங்காயம் தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
    X
    திண்டுக்கல் வெங்காய மண்டியில் உள்ள ஒரு கடையில், வெங்காயம் தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

    வரத்து குறைவால் சின்னவெங்காயம் கிலோ ரூ.110-க்கு விற்பனை

    திண்டுக்கல்லில் வரத்து குறைவால் சின்ன வெங்காயம் கிலோ ரூ.110-க்கு விற்பனை ஆனது. காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட மாவட்டம் ஆகும். இங்கு அதிக அளவில் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. சின்ன வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், முருங்கைக்காய் உள்பட அனைத்து வகையான காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகிறது. அவ்வாறு பயிரிடப்படும் காய்கறிகள் திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுகளில் விற்பனையாகிறது.

    பின்னர் அங்கிருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகள் மட்டுமின்றி கேரளாவுக்கும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மார்க்கெட்டுகள் மூடப்பட்டதால், காய்கறிகளை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்தனர். இதனால் காய்கறிகளை பறிக்காமல், செடிகளிலேயே விடும் நிலை ஏற்பட்டது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், காய்கறிகள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியது.

    மேலும் கடந்த மாதம் புரட்டாசி என்பதால் காய்கறிகள் அதிக அளவில் விற்பனை ஆகின. இதனால் காய்கறிகளின் விலை உயர்ந்தபடி இருந்தது. இதற்கிடையே புரட்டாசி மாதம் நிறைவுபெற்ற நிலையில், நவராத்திரி தொடங்கி விட்டது. நவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் சைவ உணவையே சாப்பிடுவார்கள். இதனால் காய்கறிகளின் தேவை அதிகரித்து விட்டது.

    இதன் விளைவாக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் காய்கறிகள் வெளிமாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்துக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் திண்டுக்கல்லில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது. அதன்படி திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் நேற்று முருங்கைக்காய் கிலோ ரூ.90-க்கும், கேரட் ரூ.50 முதல் ரூ.80-க்கும், பீட்ரூட் ரூ.50-க்கும், பீன்ஸ் மற்றும் அவரைக்காய் தலா ரூ.80-க்கும், உருளைக்கிழங்கு ரூ.60-க்கும், கத்தரிக்காய் ரூ.30 முதல் ரூ.50-க்கும் பச்சை மிளகாய் ரூ.60-க்கும், இஞ்சி ரூ.50-க்கும் விற்பனை ஆனது.

    சின்னவெங்காயத்தை பொறுத்தவரை திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், அவினாசி, உடுமலைபேட்டை ஆகிய பகுதிகளில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து சின்னவெங்காயம் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. மேலும் உள்ளூரில் அறுவடையாகும் வெங்காயம் மட்டுமே திண்டுக்கல் வெங்காய மண்டிக்கு விற்பனைக்கு வருகிறது.

    அதேபோல் பல்லாரி வெங்காயத்தை பொறுத்தவரை கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்து திண்டுக்கல்லுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. அதன் வரத்தும் குறைந்து கொண்டே போகிறது. சின்ன வெங்காயம் மற்றும் பல்லாரியின் தேவை அதிகமாக இருக்கும் நிலையில், வரத்து குறைந்ததால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    அதன்படி நேற்று தரமான சின்னவெங்காயம் கிலோ ரூ.110-க்கும், பல்லாரி வெங்காயம் ரூ.60-க்கும் விற்பனை ஆனது. மேலும் முகூர்த்தநாளில் அவற்றின் விலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க இருப்பு வைத்துள்ள வெங்காயத்தை விற்பனை கொண்டு வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×