search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முட்டை
    X
    முட்டை

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிர்ணயம் செய்வதில் மாற்றம்

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிர்ணயம் செய்வதில் நாளை மறுநாள் முதல் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு அறிவித்து உள்ளது.
    நாமக்கல்:

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழுவின் நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அளவில் இன்றைய நிலவரப்படி மற்ற மண்டலங்களின் முட்டை கோழிப்பண்ணையாளர்களை ஒப்பிடுகையில் நாமக்கல் மண்டல முட்டை கோழிப்பண்ணையாளர்களுக்கு தான் கையில் கிடைக்கும் முட்டை விலை மிகவும் குறைவு. இதற்கு காரணம் தற்போது நாமக்கல் மண்டலத்தில் பின்பற்றப்படும் வியாபார மாதிரி காலத்திற்கேற்றவாறு இல்லை. நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) தற்போது வாரம் 3 முறை விலை நிர்ணயம் செய்து வருகிறது. இந்திய அளவில் நாமக்கல்லில் மட்டுமே இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. மற்ற மண்டலங்களில் தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு தற்போது திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமை ஆகிய 3 நாட்கள் முட்டை விலையை அறிவிக்கிறது. நாமக்கல் முட்டை வியாபாரிகள் சங்கம், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு அறிவிக்கும் விலையில் இருந்து எவ்வளவு மைனசுக்கு முட்டை வாங்குவார்கள் என்பதனை தினசரி அறிவிக்கிறார்கள். ஆனால் வியாபாரிகள் சங்கம் அறிவிக்கும் விலையை விட குறைத்து வாங்குகிறார்கள்.

    சமீபகால நிலவரப்படி தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு அறிவிக்கும் விலையில் இருந்து பண்ணையாளர்களுக்கு 50 முதல் 60 பைசா குறைவாகவே கையில் கிடைக்கிறது. வியாபாரிகள் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு அறிவிக்கும் விலையில் இருந்து 50 முதல் 60 பைசா வரை குறைத்து பண்ணையாளர்களிடம் முட்டையை கொள்முதல் செய்தாலும், சில்லறை வியாபாரத்தில் முட்டை விற்கும் போது தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயம் செய்யும் விலையை அடிப்படையாக கொண்டே முட்டையை விற்கிறார்கள்.

    இதனால் நுகர்வோர் தேவையில்லாமல் குறைந்தபட்சம் 50 பைசா வரை அதிகம் கொடுத்து, முட்டை வாங்குகிறார்கள். தற்போதைய நடைமுறையால் முட்டை விற்பனை குறைகிறது. இதுவே நாமக்கல்லில் மைனஸ் விலை இல்லாமல் இருந்தால் (அதாவது என்.இ.சி.சி. அறிவிக்கும் விலையே பண்ணையாளர்களுக்கு கையில் கிடைக்கும் விலையாக இருந்தால்) நுகர்வோருக்கு குறைந்தபட்சம் 50 பைசா வரை முட்டை ஒன்றிற்கு குறைவாக கிடைக்கும். இதனால் முட்டை விற்பனை அதிகரிக்கும்.

    நாமக்கல் மண்டலத்தில் ஏற்படும் மைனஸ் பிரச்சினையால் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்திய அளவில் முட்டை விலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவின் தலைமையக அறிவுரைப்படி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் நாமக்கல்லிலும் பண்ணையாளர்களுக்கு கிடைக்கும் விலையே (மற்ற மண்டலங்களில் உள்ளது போல்) தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலையாக தினசரி அறிவிக்க இருக்கிறோம்.

    5 நாட்கள் இடைவெளிக்கு பிறகு தற்சமயம் வட மாநிலங்களுக்கு முட்டைகள் அனுப்புவது மீண்டும் தொடங்கி உள்ளது. எனவே வரும் நாட்களில் முட்டை விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நாமக்கல்லிலும் மற்ற மண்டலங்களை போல மைனஸ் விலை இல்லை என்ற நடைமுறை அமல்படுத்தப்படுவதன் மூலம் நுகர்வோருக்கு குறைந்தபட்சம் 50 பைசா வரை முட்டையின் வாங்கும் விலை குறையும்.

    பண்ணையாளர்கள் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு அறிவிக்கும் விலைக்கே முட்டைகளை விற்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பண்ணையாளர்கள் நலன் கருதி தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு எடுத்த ‘நோ மைனஸ்’ என்ற நிலைப்பாட்டிற்கு தங்களுடைய முழு ஒத்துழைப்பை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் சந்தை நிலவரத்தை அனுசரித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு அறிவிக்கும் விலைக்கே முட்டைகளை விற்று அதிகம் பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×