search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கிரமராஜா
    X
    விக்கிரமராஜா

    தீபாவளியையொட்டி நள்ளிரவு 12 மணி வரை கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் - விக்கிரமராஜா வலியுறுத்தல்

    தீபாவளி பண்டிகையையொட்டி நள்ளிரவு 12 மணி வரை கடைகள் திறந்து இருக்க அரசு அனுமதிக்க வேண்டும் என வணிக சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தினார்.
    விருதுநகர்:

    வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா நேற்று விருதுநகர் கலெக்டர் கண்ணனிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

    அந்த மனுவில், சிவகாசி காய்கறி மார்க்கெட்டை செயல்படுத்த வேண்டும் என்றும், சாத்தூர் காய்கறி மார்க்கெட்டில் அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும், மாவட்டத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார்.

    பின்ன கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:-

    ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து கடைகளையும் இரவு 10 மணி வரை திறந்து வைக்க அனுமதி அளிக்க வேண்டும். தீபாவளி பண்டிகையையொட்டி கடைசி 5 நாட்கள் நள்ளிரவு 12 மணி வரை கடைகள் திறந்து இருக்கவும் அரசு அனுமதி அளிக்க வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகத்தினருக்கு உடனடியாக உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.

    தமிழகம் முழுவதும் திருச்சி காந்தி காய்கறி மார்க்கெட் உள்பட பல இடங்களில் காய்கறி மார்க்கெட்டுகள், மார்க்கெட் இடங்களுக்கு வெளியே செயல்பட்டு வருவதால் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இழப்பு ஏற்படுகிறது. பொதுமக்களும் பாதிப்பு அடைகின்றனர். எனவே அனைத்து இடங்களிலும் காய்கறி மார்க்கெட் முழுமையாக செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காய்கறி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு மூலம் வெளிநபர்கள் வியாபாரம் செய்வதால் போதிய இடம் இல்லாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே காய்கறி மார்க்கெட்டுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயம்பேடு மார்க்கெட்டில் பழம், பூக்கள் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படாத நிலையே உள்ளது. இது தொடர்பாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேச இருக்கிறோம். கோயம்பேடு மார்க்கெட்டில் பழங்கள், பூக்கடைகளை அனுமதிக்க வேண்டும். கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். எனவே கொரோனா பரவலுக்கு எவ்வித வாய்ப்பும் இருக்காது.

    கடைகளில் வேலை பார்த்து தற்போது வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். பட்டாசு தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்க அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வியாபார சங்கத்தினர் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.
    Next Story
    ×