search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகையில் சிறப்பு விற்பனையை கலெக்டர் ராமன் தொடங்கிவைத்து பார்வையிட்டபோது எடுத்தபடம்
    X
    கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகையில் சிறப்பு விற்பனையை கலெக்டர் ராமன் தொடங்கிவைத்து பார்வையிட்டபோது எடுத்தபடம்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.4½ கோடி விற்பனை இலக்கு- கலெக்டர் ராமன் தகவல்

    சேலத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.4 கோடியே 65 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் ராமன் தெரிவித்தார்.
    சேலம்:

    சேலம் கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள ஜவுளி ரகங்களை பார்வையிட்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கடந்த 85 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விழா காலங்களில் 30% வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் மதிப்பிலான புதிய வடிவமைப்புகளில் பட்டுப்புடவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று காஞ்சிபுரம், ஆரணி பட்டு புடவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று கோவை, மதுரை, பரமக்குடி, திருச்சி, மற்றும் சேலம் ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்ட அனைத்து வகை காட்டன் புடவைகள் உள்ளன. மெத்தைகள், கையுறைகள், டேபிள் மேட், தலையணை உறைகளும் விற்பனைக்கு உள்ளன.

    சேலம், ஆத்தூர், எடப்பாடி, மேட்டூர் ஆகிய 4 விற்பனை நிலையங்களில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.4 கோடியே 65 லட்சம் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.3 கோடியே 70 லட்சம் மதிப்பிலான ஜவுளிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சிறப்பு தள்ளுபடியாக அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வசதியில் 30 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    விற்பனை நிலையங்களுக்கு செல்பவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி துணிகள் வாங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனர்கள் லலிதா ராஜா, பாலசுப்பிரமணியன், ராஜராஜேஸ்வரி, வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×