search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரி தீப்பிடித்து எரிவதை படத்தில் காணலாம்
    X
    லாரி தீப்பிடித்து எரிவதை படத்தில் காணலாம்

    தொப்பூர் கணவாய் பகுதியில் லாரி தீப்பிடித்து எரிந்தது - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    தொப்பூர் கணவாய் பகுதியில் ஓடும் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதன் காரணமாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    நல்லம்பள்ளி:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெல்லாரிக்கு நேற்று லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டம் கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த மணி (வயது 52) என்பவர் ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக திருச்சி மாவட்டம் வடக்குப்பட்டியை சேர்ந்த நடராஜ் (42) உடன் வந்தார். இந்த லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் சென்ற போது திடீரென லாரி என்ஜினில் கரும்புகை வந்தது.

    இதைப் பார்த்த டிரைவர் மற்றும் மாற்று டிரைவர் ஆகியோர் சாலையோரமாக லாரியை நிறுத்தி விட்டு கீழே இறங்கினர். பின்னர் சிறிது நேரத்தில் என்ஜினில் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. இதுகுறித்து தர்மபுரி தீயணைப்பு நிலையத்திற்கும், தொப்பூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் சுங்கச்சாவடி பணியாளர்கள், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் லாரி எரிந்து சேதமடைந்தது.

    இந்த விபத்தால் மற்ற வாகனங்களுக்கும் தீ பரவாமல் தடுக்கும் வகையில் போலீசார், சாலையின் இருபுறமும் போக்குவரத்தை நிறுத்தினர். இதனால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கி கொண்டன. இந்த தீ விபத்து காரணமாக தொப்பூர் கணவாய் பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். லாரியில் பிடித்த தீ அணைக்கப்பட்ட பிறகு லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை போலீசார் சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×