search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் அருகே பாரம்பரிய பூங்கார் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலை காணலாம்
    X
    திருவாரூர் அருகே பாரம்பரிய பூங்கார் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலை காணலாம்

    மாவட்டம் தோறும் பாரம்பரிய நெல்லுக்கான கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

    பாரம்பரிய நெல் சாகுபடியில் ஈடுபடுபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்டம் தோறும் பாரம்பரிய நெல்லுக்கான கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருவாரூர்:

    உலகம் முழுவதும் நாளுக்கு நாள் பெயர் கூற முடியாத புதிய, புதிய நோய்கள் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பழைய உணவு பழக்க முறையில் இருந்து மாறியதால் ஏற்பட்ட விளைவு நோய் தாக்குதல் என காலம் கடந்து மருத்துவ நிபுணர்கள் ஏற்று கொள்ளும் நிலை இருந்து வருகிறது. நஞ்சில்லாத இயற்கை முறையில் விளைவிக்கும் உணவு பொருட்களுக்கு மக்களிடையே வரவேற்பு உள்ளது.

    இதற்கான என்ன விலை கொடுத்தும் பொருட்களை வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது. எங்கும் இயற்கை முறையில் உற்பத்தி என்ற வார்த்தை நாள்தோறும் பார்க்க முடிகிறது. நமது பகுதியில் 3 வேளை உணவில் முக்கிய இடத்தை பிடிப்பது அரிசி தான். இந்த அரிசி என்பது பாரம்பரிய ரகங்கள் மறைந்து புதிய மாற்றங்களில் வியாபார ரீதியில் நோக்கி சென்றால் பல்வேறு நோய் பாதிப்புகளை சந்தித்து வருகிறோம்.

    தற்போது தமிழகத்தில் விவசாய முறையில் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது. அதுவே பாரம்பரிய நெல்லை நோக்கி விவசாயிகள் திரும்பி வருகின்றனர். இதற்காக பல்வேறு அமைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி மறைந்த பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் திருவாரூர் அருகே பூதமங்கலசேரியை சேர்ந்த விவசாயி பாலு என்பவர் தனக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி மேற்கொண்டு வருகிறார். அதன்படி பாரம்பரிய நெல்லான பூங்கார், சொர்ண மசூரி ரகத்தை சாகுபடி செய்து வருகிறார். தற்போது பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகிறது. ஆனால் இந்த நெல்லை விற்பனை செய்வதற்கு உரிய வசதிகள் இல்லாமல் இருந்து வருகிறது.

    இதுகுறித்து பாலு கூறுகையில்,

    சொர்ணமசூரி சன்ன ரகத்தை சேர்ந்தது. இயற்கை பேரிடர்களுக்கு ஒரளவு தாக்கு பிடிக்க கூடியது. சொனை தன்மை இயற்கையாக அமைந்திருப்பதால் பூச்சி தாக்குதல் இருப்பதில்லை. பூங்கார் குறுகிய கால பயிர், எல்லா பருவத்திற்கு ஏற்ற ரகமாகவும், மழை, வெள்ளம், வறட்சியை தாங்க கூடியது. இரு ரகங்களும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நெல் ரகம், நல்ல மகசூல் தர கூடியது.

    பாரம்பரிய நெல் சாகுபடி அனைவராலும் வரவேற்கப்பட்ட போதிலும் நெல்லுக்கான உரிய விலை கிடைப்பதில்லை என்பது விவசாயிகளுக்கு வேதனையளிக்கிறது. எனவே தமிழக அரசு, மாவட்டம் தோறும் பாரம்பரிய நெல் கொள்முதல் நிலையம் ஏற்படுத்தி நெல்லை கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். இதன் மூலம் மேலும் பல விவசாயிகள் பாரம்பரிய நெல் சாகுபடியில் ஈடுபடுவதற்கு வழி வகுக்கும் என்றார்.
    Next Story
    ×