search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீயணைப்பு படைவீரர் உள்ளே நுழைந்ததையும், மீட்கப்பட்ட குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டதையும் படத்தில் காணலாம்.
    X
    தீயணைப்பு படைவீரர் உள்ளே நுழைந்ததையும், மீட்கப்பட்ட குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டதையும் படத்தில் காணலாம்.

    தேனியில் குழந்தையுடன் வீட்டுக்குள் சிக்கி தவித்த பெண்

    தேனியில் குழந்தையுடன் வீட்டுக்குள் சிக்கி தவித்த பெண்ணை தீயணைப்பு படைவீரர் உள்ளே நுழைந்து மீட்டனர்.
    தேனி:

    தேனி ஒயிட்ஹவுஸ் 1-வது தெருவில் வசிப்பவர் ராஜ்குமார். இவருடைய மனைவி மோனிஷா (வயது 27). இவர்களுக்கு கர்ஷிதா என்ற 1½ வயது பெண் குழந்தை உள்ளது. இவர்கள் வசிக்கும் வீடு தரைத்தளம் மற்றும் முதல் மாடியை உள்ளடக்கியது. மாடி வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர். ராஜ்குமார் நேற்று வேலை தொடர்பாக வெளியே சென்றுவிட்டார். இதற்கிடையே மோனிஷா குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றார். முன்னதாக தனது குழந்தை வீட்டில் இருந்து வெளியே சென்று விடக்கூடாது என்பதற்காக நுழைவு வாயில் கதவை அவர் பூட்டிவிட்டார். இதனால் குழந்தை வராண்டாவில் விளையாடி கொண்டிருந்தது. இந்தநிலையில் அந்த குழந்தை, விளையாட்டுத்தனமாக மோனிஷா குளித்து கொண்டிருந்த குளியல் அறையின் கதவை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டது. இதனால், குளித்துவிட்டு மோனிஷாவால் வெளியே வரமுடியவில்லை. குளியல் அறைக்குள் அவர் சிக்கிக் கொண்டார். குழந்தை வராண்டாவில் சிக்கிக்கொண்டது.

    இந்தநிலையில் சிறிது நேரத்தில் குழந்தை அழத் தொடங்கியது. இதனால், குளியல் அறைக்குள் இருந்த மோனிஷா, குழந்தையை காப்பாற்றுமாறு அபயகுரல் எழுப்பினார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக தேனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் தலைமையிலான தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால், வீட்டுக்கு வெளியே ராட்சத ஏணியை வைத்து, கண்ணாடி கதவு பொருத்தப்பட்ட ஜன்னல் வழியாக தீயணைப்பு வீரர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் குழந்தையை மீட்டனர். குளியல் அறைக்குள் சிக்கி இருந்த தாயையும் மீட்டு, குழந்தையை அவரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×