search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோசடி
    X
    மோசடி

    திருச்சி தொழிலதிபரிடம் ரூ.2 கோடி மோசடி- 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு

    அரிசி ஏற்றுமதி செய்வதாக கூறி திருச்சி தொழில் அதிபரிடம் ரூ.2 கோடி வரை மோசடி செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    திருச்சி:

    திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் நிரஞ்சன் (வயது 28). இவர் தனியார் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த மைக்கேல் என்பவர் பழக்கமானார். இவர் தனது நண்பரான மத்திய பிரதேசம் குர்கான் மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவரை நிரஞ்சனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பிரசாந்த் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் மைக்கேலும், பிரசாந்தும் சேர்ந்து நிரஞ்சன் பெயரில் வெனிசுலாவுக்கு 720 மெட்ரிக் டன் அரிசி ஏற்றுமதி செய்வதாக கூறி, அவரிடம் ரூ.2 கோடியே 34 லட்சம் கேட்டனர். இதுதொடர்பாக அவர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி நிரஞ்சன் முதல்கட்டமாக ரூ.44 லட்சத்து 88 ஆயிரத்தை திருச்சியில் இருந்து தனியார் வங்கி மூலம் மைக்கேல் சொன்ன வங்கி கணக்கில் செலுத்தினார். அதன்பிறகு ரூ.1 கோடியே 54 லட்சத்தை செலுத்தினார்.

    இந்தநிலையில் பணத்தை பெற்றுக்கொண்டு துறைமுகத்திலிருந்து வெனிசுலாவுக்கு அரிசி அனுப்பப்பட்டதாக போலி ஆவணம் தயாரித்து அவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி அறிந்த நிரஞ்சன் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மைக்கேல், பிரசாந்த், விதார்பிரசார் ஆகிய 3 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×