search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பார்வையிட்டபோது எடுத்தபடம்.
    X
    பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பார்வையிட்டபோது எடுத்தபடம்.

    நெல்லையில் 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் சிக்கினர்

    நெல்லையில் 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் சிக்கினர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில், போலீசார் தினமும் வாகன சோதனையில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்துபவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நெல்லை மாநகர பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகவும், அதற்காக ஒரு சில குடோன்கள், வீட்டுத்தொழுவம் ஆகியவற்றில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நெல்லை டவுன் வாகையடி முனையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு லோடு ஆட்டோவில் ஒரு டன் ரேஷன் அரிசி எடுத்துச்செல்லப்பட்டது. இதை கவனித்த போலீசார் உடனே அந்த லோடு ஆட்டோவையும், அரிசியையும் பறிமுதல் செய்து, அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது லோடு ஆட்டோவில் இருந்த 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக தகவல்களை தெரிவித்தனர். உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் லோடு ஆட்டோ டிரைவர் கக்கன் நகரை சேர்ந்த கணேசன் என்றும், மற்றொரு நபர் டவுன் வாகையடி முனை பகுதியைச் சேர்ந்த ரேஷன் கடை ஊழியர் பேராட்சி செல்வம் என்பதும் தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுத் தொழுவத்தில் 5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே பாளையங்கோட்டை போலீசார் அந்த இடத்திற்கு சென்று 80 சாக்குப்பைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த அரிசியை பதுக்கி வைத்தவர்கள் யார்? என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    Next Story
    ×