search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருமாம்பாக்கம் பகுதியில் சுற்றித்திரிந்த மாணவர்களை போலீசார் எச்சரித்த காட்சியை படத்தில் காணலாம்.
    X
    கிருமாம்பாக்கம் பகுதியில் சுற்றித்திரிந்த மாணவர்களை போலீசார் எச்சரித்த காட்சியை படத்தில் காணலாம்.

    இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரியும் மாணவர்கள்- போலீசார் எச்சரிக்கை

    கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரியும் மாணவர்களை போலீசார் எச்சரித்தனர்.
    பாகூர்:

    கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டன. மற்ற வகுப்புகளுக்கு தேர்வு நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஆன்லைன் மூலம் நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த வாரம் முதல் புதுவையில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பாடங்களில் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    மற்ற வகுப்புகள் இன்னும் நடைபெறவில்லை. இதனால் கடந்த 7 மாதங்களாக வீட்டிலேயே மாணவர்கள் முடங்கியுள்ளனர். கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாணவர்கள் கூட்டாக சேர்ந்து ஆறு, குளம், ஏரி என சுற்றுகின்றனர். சிலர் இருசக்கர வாகனங்களில் பூங்கா, கடற்கரை என வலம் வருகின்றனர். அவர்களை முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.

    கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார் குப்பம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த மாணவர்களை அந்த வழியாக ரோந்து சென்ற தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழி மறித்து விசாரித்தார். உரிமம் இன்றி வாகனம் ஓட்டியதை அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், மாணவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து, அறிவுரை கூறி அவர்களை அனுப்பி வைத்தார். கொரோனா காலத்தில் வெளியில் சுற்றித்திரியாமல் வீட்டில் இருந்து பாடம் படிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
    Next Story
    ×