search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.ஸ்வேதா
    X
    ஜி.ஸ்வேதா

    பயிற்சி மையத்துக்கு சென்று படிக்காமல் முதல் முயற்சியிலேயே ‘நீட்’ தேர்வில் சாதித்த சென்னை மாணவி

    பயிற்சி மையத்துக்கு சென்று படிக்காமல் முதல் முயற்சியிலேயே ‘நீட்’ தேர்வில் மாநில அளவில் 3-ம் இடம் பிடித்து சென்னை மாணவி சாதனை படைத்துள்ளார்.
    சென்னை:

    சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த கணேஷ்குமார்-கலைச்செல்வி தம்பதியினரின் மகள் ஜி.ஸ்வேதா. இவர் சென்னை மேல அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்தார். இவர் கடந்த மாதம் நடந்த ‘நீட்’ தேர்வில் பங்கேற்று 720 மதிப்பெண்களுக்கு 701 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 62-வது இடமும், மாநில அளவில் 3-ம் இடமும் பிடித்து அவர் சாதனை படைத்துள்ளார்.

    சாதனை மாணவி ஜி.ஸ்வேதாவுக்கு பாராட்டு விழா, சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளியின் முதல்வர்கள் உமா மகேஸ்வரன், ஜெயந்தி ராஜகோபாலன் ஆகியோர் மாணவி ஸ்வேதாவுக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டினர். மாணவியின் பெற்றோர் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

    அதனைத்தொடர்ந்து மாணவி ஜி.ஸ்வேதா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிறுவயதில் இருந்தே எனது கனவு டாக்டர் ஆவது தான். அதற்காகவே ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்தேன். இதற்காக எந்த பயிற்சி மையத்துக்கும் செல்லவில்லை. பள்ளியில் வழங்கப்படும் ‘நீட்’ தேர்வுக்கான ஆன்-லைன் வழி பயிற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டேன். தினமும் 10 முதல் 12 மணி நேரம் வரை படிப்பேன். எனது முதல் முயற்சியிலேயே ‘நீட்’ தேர்வில் சாதித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றிக்கு பெற்றோரும், பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த உத்வேகமும், ஊக்கமுமே காரணம். பள்ளிகள் வழக்கம்போல செயல்பட்டு வகுப்புகள் நடைபெற்றிருந்தால் நிச்சயம் இன்னும் அதிகமாக மதிப்பெண்கள் எடுத்திருப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×