search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மகளுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி, மனைவிக்கு ஆயுள் தண்டனை

    மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கும், உடந்தையாக இருந்த அவருடைய மனைவிக்கும் ஆயுள் தண்டனை அளித்து போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 47 வயது ஆண், 45 வயது பெண் ஆகியோர் விவசாய கூலித்தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 14 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில் 14 வயது சிறுமியை சொந்த மகள் என்றும் பாராமல் கடந்த 2018-ம் ஆண்டு முதல் அந்த தொழிலாளி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இது பற்றி அந்த சிறுமி தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். ஆனால் அதை அவருடைய தாய் பொருட்படுத்தாமல் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி அந்த சிறுமியை, அவருடைய தந்தை மீண்டும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக கூறப்படுகிறது. இது குறித்து தனது தாயிடம் கூறினால் கண்டு கொள்ள மாட்டார் என்று கருதிய அந்த சிறுமி, தான் படிக்கும் பள்ளி ஆசிரியை ஒருவரிடம் கூறி கதறி அழுது உள்ளார்.

    அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை, சிறுமியை அழைத்துக்கொண்டு ஆனைமலை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை அவருடைய தந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும், அதற்கு சிறுமியின் தாய் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியையும், அவருடைய மனைவியையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை சிறப்பு போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. விசாரணை முடிவில், மகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனையும், பாலியல் துன்புறுத்தல் குறித்து மகள் தெரிவித்து அதை தடுக்காத தாயாருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ராதிகா உத்தரவிட்டார். மேலும் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் தலா ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும், எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
    Next Story
    ×