search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயர் நீதிமன்ற மதுரை கிளை
    X
    உயர் நீதிமன்ற மதுரை கிளை

    7.5 சதவீத இட ஒதுக்கீடு -அரசுத் தரப்பு பதிலைக் கேட்டு கண் கலங்கிய நீதிபதி

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும்படி ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என அரசு வழக்கறிஞர் கூறினார்.
    மதுரை:

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக சட்டசபையில்  மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின்படி, 4 ஆண்டு அரசு பள்ளிக்கூடங்களில் படித்து பிளஸ்-2 தேர்வு எழுதியிருக்க வேண்டும். ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

    இடஒதுக்கீடு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்திய பிறகே நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர், 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவின் நிலை என்னவென்று இன்று நீதிமன்றத்தில் கவர்னரின் செயலாளரிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர். 

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது என்றும், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி ஆளுருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், காலக்கெடு விதிக்க முடியாது என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

    அரசு தரப்பு அளித்த பதிலைக் கேட்ட நீதிபதி கிருபாகரன் அதிருப்தி அடைந்தார். கிராமப்புற மாணவர்களின் வருத்தம் மற்றும் வேதனைகள் அளவிட முடியாதது எனக் கூறி கண்கலங்கினார்.

    நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ள நிலையில், இட ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் வராதது கிராமப்புற மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர், கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை பற்றிய விவரத்தை அரசு எப்போது வெளியிடும்? என கேட்ட நீதிபதிகள், இதுபற்றி தமிழக அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்கும்படி தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.
    Next Story
    ×