search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வெள்ளியணை அருகே 2 குழந்தைகளை கொன்று திண்டுக்கல் இளம்பெண் தற்கொலை

    வெள்ளியணை அருகே 2 குழந்தைகளை கொன்று விட்டு, திண்டுக்கல்லை சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லை காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வெள்ளியணை:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா ஆர்.வெள்ளோடு அருகே உள்ள நொச்சிப்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 25). டிரைவர். இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அபர்ணாதேவி (25) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அஸ்வின்(2) என்ற மகனும், நித்தின் என்ற 6 மாத ஆண் குழந்தையும் இருந்தனர்.

    இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராம்குமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன், கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள வழியாம்புதூர் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினார். இங்கிருந்து ராம்குமார் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் ராம்குமார் வேலைக்கு சென்றுவிட்டார். அபர்ணாதேவி மட்டும் குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளார். நேற்று மாலை ராம்குமாரின் வீடு வெகு நேரமாக கதவு தாழ்ப்பாள் போடப்பட்டு திறக்கப்படாமல் இருந்தது. இதனை பார்த்த பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கதவை தட்டி உள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனையடுத்து அவர்கள் ராம்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதன்பேரில் வீட்டிற்கு வந்த ராம்குமார், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது குழந்தைகள் அஸ்வின், நித்தின் ஆகியோர் தரையில் இறந்த நிலையிலும், மனைவி அபர்ணாதேவி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அங்கிருந்தவர்கள் வெள்ளியணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் அபர்ணாதேவி மற்றும் 2 குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையான ராம்குமார் கடன் பிரச்சினையில் சிக்கி தவித்து வந்ததாகவும், இதனாலேயே சொந்த ஊரில் இருந்து வழியாம்புதூருக்கு குடிபெயர்ந்ததும் தெரியவந்தது. ஆனாலும் கடன்காரர்கள் தொடர்ந்து ராம்குமார் குடும்பத்தினருக்கு கடனை கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அபர்ணாதேவி தனது 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வெள்ளியணை போலீசார் இந்த தற்கொலைக்கு கடன் பிரச்சினை தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அபர்ணாதேவி தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்தாரா? அல்லது கழுத்தை நெரித்து கொன்றாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் வெளிவரும் என போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×