search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகா தீப மலையில் இருந்து ஆனந்தராஜின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டு கீழே கொண்டு வந்தபோது எடுத்தபடம்.
    X
    மகா தீப மலையில் இருந்து ஆனந்தராஜின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டு கீழே கொண்டு வந்தபோது எடுத்தபடம்.

    அனுமதியின்றி மகா தீபமலையில் ஏறிய வங்கி காசாளர் மூச்சு திணறல் ஏற்பட்டு பலி

    திருவண்ணாமலை மகாதீப மலையில் அனுமதியின்றி ஏறிய தனியார் வங்கி காசாளர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியானார்.
    திருவண்ணாமலை:

    பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு பின்புறம் 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலை உள்ளது. இந்த மலையின் உச்சியில்தான் கார்த்திகை மாத தீபத் திருவிழாவின் மகா தீபம் ஏற்றப்படும். இந்த மலையில் பல்வேறு ஆசிரமங்கள் உள்ளன. திருவண்ணாமலைக்கு அமைதி தேடி வரும் வெளிநாட்டு பக்தர்கள் மலை மீது ஏறி தியானம் செய்வது வழக்கம்.

    அவ்வாறு மலை மீது ஏறும் சிலர் கீழே இறங்கி வர வழி தெரியாமல் மலையிலேயே சிக்கி தவிக்கின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் உத்தரவின்பேரில் பக்தர்கள் மலை மீது ஏற வனத்துறையினர் தடை விதித்தனர். எனினும் தடையை மீறி அவ்வப்போது சிலர் மலை ஏறி வருகின்றனர். இவ்வாறு அனுமதியின்றி மலை ஏறிய தனியார் வங்கி தலைமை காசாளர் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்த விவரம் வருமாறு:-

    திருவண்ணாமலை வேங்கிக்கால் இடுக்குப்பிள்ளையார் கோவில் 4-வது தெருவை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 42) என்பவர் தனியார் வங்கியில் தலைமை காசாளராக பணியாற்றி வந்தார். இவரது மகன் போளூர் சாலையில் தனியார் விளையாட்டு அகாடமியில் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இவர்களது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் ஆகும்.

    இந்த நிலையில் நேற்று காலை தனியார் விளையாட்டு அகாடமியில் இருந்து ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொள்ளும் ஆனந்தராஜின் மகன், ஒரு சிறுமி உள்பட 13 பேரை அகாடமியை சேர்ந்த ஒருவர் மலையேறும் பயிற்சிக்காக மகா தீபம் ஏற்றப்படும் மலைக்கு அழைத்து சென்று உள்ளார். அவர்கள் அடிவாரத்திலிருந்து கந்தாஸ்ரமம் வழியாக மலையில் ஏறினர்.

    அப்போது மகனுடன் ஆனந்தராஜும் மலை ஏறியுள்ளார். இவர்கள் மலை ஏறுவதற்கு வனத்துறையினரிடம் அனுமதி வாங்கவில்லை. மலை உச்சிக்கு செல்லும் போது தலைமை காசாளர் ஆனந்தராஜுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்படவே அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

    தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மலை மீது ஏறி சென்று ஆனந்தராஜை மீட்டனர். ஆனால் அவர் இறந்து விட்டார். இதனிடையே ஆனந்தராஜ் மற்றும் சிறுவர் சிறுமிகளை மலைக்கு அழைத்துச்சென்ற பயிற்சியாளர், மற்றவர்களை அக்னிதீர்த்தம் வழியாக கீழே அழைத்து வந்து விட்டார்.

    இதனை தொடர்ந்து ஆனந்தராஜின் உடலை தீயணைப்பு துறையினர் மலை உச்சியில் இருந்து முளைப்பால் தீர்த்தம் வழியாக கீழே கொண்டு வந்தனர். மலையில் இருந்து ஆனந்தராஜின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டு தன்னார்வலர்கள் உதவியுடன் கீழே கொண்டு வர சுமார் 4 மணி நேரமானதாக கூறப்படுகிறது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    மேலும் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி மலை அடிவாரத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து இது குறித்து ஆனந்தராஜ் மற்றும் சிறுவர், சிறுமிகளை அனுமதியின்றி அழைத்து சென்றவரிடம் திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உரிய அனுமதியின்றி மகா தீபம் மலை மீது ஏறிய குழுவில் தலைமை காசாளர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×