search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    முதலீடுகள், வேலைவாய்ப்பு குறித்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

    அ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் குறித்தும், வேலைவாய்ப்புகள் குறித்தும் வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கொரோனா கால கொள்முதல் குறித்தும் தனி வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 6.46 லட்சத்தைத் தாண்டி விட்டது. அ.தி.மு.க. ஆட்சியில், மாநிலத்தின் கடன் 4.56 லட்சம் கோடியைத் தாண்டி, இந்த ஆண்டில் மேலும் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன. போதாக்குறைக்கு மவுனமாக இருந்து, சந்தையில் இன்னும் கடன் வாங்கிக் கொள்கிறோம் என்று ஜி.எஸ்.டி. கவுன்சிலில் மாநிலத்தின் நிதி உரிமையை சரண்டர் செய்திருக்கிறார் முதல்-அமைச்சர்.

    இதுவரை நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாடுகளில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்னவென்றே இதுவரை மாநில மக்களுக்குத் தெரியவில்லை. அனைத்துத் திசைகளிலும் எல்லா துறைகளிலும் படுதோல்வி கண்டு மூழ்கும் கப்பலில் அமர்ந்து கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதலீடுகளை ஈர்த்து விட்டோம், புதிய தொழில்களை துவங்கி விட்டோம் என்று தமிழக மக்களின் காதில் பூ சுற்றும் வேலையில் இறங்கியிருப்பதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அமைச்சர்கள் ஊர் ஊராக உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் போடுகிறார்கள். ஐ.டி.விங் ஆலோசனை கூட்டம் போடுகிறார்கள். அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் செயற்குழு கூட்டத்தை கூட்டுகிறார்கள். முதல்- அமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு என்று தெருத்தெருவாகப் பட்டாசு வெடிக்கிறார்கள். சாலைகளை மறித்து, பஸ்களை மறித்து இனிப்புக் கொடுத்து கொண்டாட்டம் போடுகிறார்கள். ஆனால் இவை எதிலும், முக கவசமும் அணிவதில்லை. தனிமனித இடைவெளியும் கடைப்பிடிக்கப்படுவதில்லை.

    அரசு வகுத்துள்ள கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை காற்றில் பறக்க விடுவோர் அ.தி.மு.க. அமைச்சர்களும், முதல்-அமைச்சரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அமைச்சர்களும், முதல்-அமைச்சருமே பொறுப்பற்ற வகையில் நடந்து கொள்வதால் மக்களிடம் கொரோனா பற்றி ஏற்பட்ட விழிப்புணர்வும் மங்கிப் போய், கொரோனா வேகமாகப் பரவுவதைத் தடுக்க, முககவசம் அணிவதை உறுதி செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று ஐகோர்ட்டே கேள்வி கேட்கும் நிலையை உருவாகியிருக்கிறது.

    ஆகவே, தனது கொரோனா நிர்வாகத் தோல்வியைத் திசைதிருப்ப, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போடும் நாடகங்கள் எடுபடாது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு விட்டோம் என்று கூறி இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. வெளிநாடுகளுக்கு பயணம் சென்று முதலீடுகளை கொண்டு வந்து விட்டோம் என்று பொய்களை அள்ளி வீச முடியாது.

    உலக முதலீட்டாளர் மாநாடுகள் இரண்டிலும் போடப்பட்ட ஒப்பந்தங்களால் வந்த முதலீடுகள் எவ்வளவு?, உருவாக்கிய வேலைவாய்ப்புகள் எவ்வளவு? என்பது குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட முடியாத முதல்- அமைச்சர், தமிழகத்தை முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக மாற்றி விட்டோம் என்று கூறுவது நல்ல வேடிக்கை.

    ஆகவே முதல்-அமைச்சர் இதுவரை அ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் மற்றும் இளைஞர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஊழலின் சுரங்கமாக இருக்கும் கொரோனா கால கொள்முதல்கள் குறித்து தனியாக ஒரு வெள்ளை அறிக்கையை மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    அப்போதுதான் கொரோனாவை விடக் கொடுமையானது, ஆபத்தானது இவர்கள் செய்திருக்கும் ஊழல்கள் என்பதை மக்கள் மன்றம் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு உருவாகும். வெள்ளை அறிக்கைகள் எப்போது வரும்?.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×