search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பெரம்பலூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் முடி திருத்தும் கடைகள் அடைப்பு

    பெரம்பலூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் முடி திருத்தும் கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. மேலும் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை வழக்கில் மேல்முறையீடு செய்ய அரசை வலியுறுத்தி முடி திருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    திண்டுக்கல் மாவட்டம் ஜி.குரும்பபட்டி கிராமத்தில் முடிதிருத்தும் தொழிலாளியின் மகளான 12 வயது சிறுமி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், கைதான வாலிபரை திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலை செய்து உத்தரவிட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், சிறுமிக்கு உரிய நீதி கிடைக்கும் வகையில் இந்த தீர்ப்பினை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அக்டோபர் 9-ந்தேதி அனைத்து முடி திருத்தும் கடைகள் (சலூன்) மூடப்படும் என்று ஏற்கனவே தமிழ்நாடு மருத்துவர் சமூக மத்திய சங்கம், தமிழ்நாடு முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தினர் சார்பில் அறிவித்திருந்தனர்.

    அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து முடி திருத்தும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 3 ஆயிரம் முடி திருத்தும் கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்தன.

    மேலும் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மருத்துவர் சமூக மத்திய சங்கம், தமிழ்நாடு முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே இருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் சென்று, கலெக்டரிடம் மேற்கண்டவை தொடர்பான கோரிக்கை மனுவினை அளிப்பதற்காக ஒன்று கூடினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஊர்வலமாக செல்வதற்கு தடை விதித்தனர். இதனால் அங்கேயே முடி திருத்தும் தொழிலாளர்கள் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி, கொலையுண்ட வழக்கில் குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    இதையடுத்து சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளில் சிலர், கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரனை சந்தித்து மனு ஒன்றினை வழங்கி விட்டு வந்தனர். இதில் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மருத்துவர் சமூக மத்திய சங்கம்-முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் தலைவர் இளங்கோவன், பொருளாளர் கோவிந்தராஜ், பெரம்பலூர் நகர தலைவர் செந்தில்குமார், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×