search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    திருவண்ணாமலையில் 11-ந்தேதி வேளாண் சட்ட எதிர்ப்பு மாநாடு: கே.எஸ்.அழகிரி

    தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் திருவண்ணாமலையில் 11-ந்தேதி வேளாண் சட்ட எதிர்ப்பு மாநாடு நடைபெறும் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த ஜூன் 5-ந்தேதி மூன்று அவசரச் சட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு பிறப்பித்தது. இதை செப்டம்பர் மாதத்தில் மக்களவையில் மிருகபல பெரும்பான்மையோடும், மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலையில், குரல் ஓட்டெடுப்பு மூலமும் பலவந்தமாக மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் பாராளுமன்ற ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.

    விவசாயிகளுக்கு விரோதமான அவசரச் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டங்களில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிராக்டர் ஊர்வலத்தின் மூலமாகப் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கிறார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவிப்பின்படி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மாநிலம் முழுவதும் பரவலாக பலகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வருகிற 11-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் எனது தலைமையில் கண்டன மாநாடு திருவண்ணாமலையில் நடைபெற இருக்கிறது.

    இம்மாநாட்டை ஒட்டி விவசாய விரோத சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம்? என்கிற நூலை சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. வெளியிடுகிறார்.

    இந்த மாநாட்டில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சஞ்சய் தத், டாக்டர் சிரிவெல்ல பிரசாத், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈ.வெ.கி.ச.இளங்கோவன், திருநாவுக்கரசர் எம்.பி., எம்.கிருஷ்ணசாமி, நாடாளு மன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், இதர துறைகளின் தலைவர்கள் மற்றும் பெருந்திரளான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.

    திருவண்ணாமலை மாநாடு தமிழக விவசாயிகளின் எதிர்காலத்தில் திருப்பம் ஏற்படுத்துகிற வகையில் அமைய இருக்கிறது. மத்திய பா.ஜ.க. அரசின் அவசர வேளாண் சட்டங்களால் இந்திய விவசாயிகளின் எதிர் காலமே கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கிறது.

    இந்த சட்டங்களுக்குத் தமிழக விவசாயிகளின் கண்டனத்தை பா.ஜ.க. அரசுக்கு உணர்த்துகிற வகையில் திருவண்ணாமலை மாநாடு வெற்றிகரமாக அமைந்திட விவசாயப் பெருங்குடி மக்களை அன்போடு அழைக்கிறேன். அக்டோபர் 11-ந்தேதி கூடுவோம். பா.ஜ.க.வின் விவசாய விரோத சட்டங்களை முறியடிக்கப் பெருந்திரளாக அணிதிரண்டு வர அன்போடு அழைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×